Ad Widget

வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! – பொலிஸாரின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயம்!!

வேலையில்லாப் பட்டாதாரிகள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும், தண்ணீர்ப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸார் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

colombo-arpaddam-paddatharekal

தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசு அளித்திருந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றவில்லை. எனவே, தங்களது வேலைவாய்ப்பு உடன் உறுதிச்செய்யப்பட வேண்டும் என்று கோரியே வேலையில்லாப் பட்டதாரிகள் நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து லோட்டஸ் வீதியினூடாக சென்று ஜனாதிபதி செயலக வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி செயலக வீதியினூடாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பயணிக்க முற்பட்டனர். அந்த இடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். வீதித் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்ல முயற்சித்தனர். இதனால், இரு தரப்பினருக்குமிடையே முறுகல் ஏற்பட்டது.

இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப் பிரையோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் காயமடைந்ததுடன், ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. அத்துடன், வீதியினூடான போக்குவரத்தும் சுமார் நான்கு, ஐந்து மணித்தியாலங்கள் முடங்கியிருந்தது.

Related Posts