Ad Widget

வேண்டத்தகாத செயல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன – முதலமைச்சர் சி.வி

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தற்போது வேண்டத்தகாத பல செயல்கள் வேகமாகப் பரவி வருவது, அச்சத்தையும் மன வேதனையையும் தருகின்றது. போதை பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், வேண்டத்தகாத இணைய பக்கங்களில் நுழைந்து உணர்வுகளைத் தூண்டக் கூடிய காட்சிகளைப் பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மாணவ சமுதாயம், படிப்பில் அக்கறையின்றி புலனுணர்வு சார்ந்த விடயங்களில் பொழுதைக் கழித்து கல்வியை இழந்து, உடல் உளத் தூய்மைகளையும் இழக்க வேண்டிய ஒரு காலமாக இந்தக் கால கட்டம் மாறியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘விழுமியங்கள் இணைந்த தலைமைத்துவம்’ என்னும் தொனிப்பொருளில் அதிபர்களுக்கான பயிற்சிப் பட்டறை, கைதடியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘பத்திரிகைகள் மற்றும் ஒலிபரப்புச் சாதனங்கள் மூலம் தினமும் கிடைக்கப்பெறுகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

சில ஆசிரியர்கள் கூட, மாணவ மாணவியரைக் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் பணி இடைநிறுத்தத்தில் உள்ளதாக அறிகின்றேன்.

இவற்றில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் உள்ளதென்பதை நான் அறியேன். எனினும, உண்மைகள் ஏதுமிருப்பின் அவர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது எனது கருத்து.

காரணம் ஒரு சட்டத்தரணி, ஒரு வைத்தியர், ஒரு ஆசிரியர் என்போர் மக்களுடன் அந்தரங்கமாகப் பழக வேண்டியிருப்பதால் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாகக் கடமையாற்ற வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் மீது கனமான நம்பிக்கையைச் சமுதாயம் வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டால் அவர்கள் அத் தொழிலில் நீடிக்கத் தகுதி அற்றவர்கள் ஆகின்றார்கள். பாடசாலைகளில் ஏதாவது பிழைகள் நடைபெறுகின்ற போது அதற்கான முழுப்பொறுப்புக்களும் அதிபர்களையே சென்றடைகின்றது.

பெற்றோர்களும் அதிபர்களை நம்பியே பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றனர். எனவே அதிபர் ஒரு ஆளுமை மிக்கவராகவும் தலைமைத்துவப் பண்பு உடையவராகவும் ஒழுக்கம் உடையவராகவும் இருப்பதன் மூலமே அப்பாடசாலைகளில் உள்ள சகல ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்குரிய சரியான அறிவுறுத்தல்களை வழங்கி கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஒழுக்க அனுசரிப்புக்களிலும் முன்னேற்றம் காண முடியும்.

அதிபர்களில் பலர் இன்று ஏனோ தானோ என்ற நிலையில் பாடசாலைகளுக்குச் சென்று வருவது கண்கூடு. மாணவர்களைத் தண்டித்தால் மனித உரிமை மீறல் வழக்குகள் வரக் கூடும், ஆசிரியரைத் தண்டித்தால் தனக்குக் கட்டாய இடமாற்றம் ஏற்படக் கூடும் என்று இப்படியான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய ஒரு பழக்கத்தைக் கையாளத் தலைப்படுகின்றனர்.

இல்லையேல், அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவரின் வேட்டியை அல்லது சேலையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளத் தலைப்படுகின்றார்கள்.

சில சமயங்களில் என்னைப் பார்க்க ஆசிரியர்கள், அதிபர்கள் வெகுதொலைவில் இருந்து வருகின்றார்கள். பாடசாலை நேரத்தில் தான் வருகின்றார்கள். அப்படியாயின் இவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லையா? இவர்களின் கற்பித்தல்ச் செயற்பாடுகள் யாரால் மேற்கொள்ளப் படுகின்றன? இவர்களின் வருகையின்மை அல்லது ஒழுங்கீனம் பற்றி அதிபர் அறிந்துள்ளாரா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

என்னைச் சந்தித்துத் தமது குறைகளைக் கூறுவது தவறில்லை. ஆனால் பாடசாலை ஒழுக்கத்துக்கு, ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படமால் அவர்கள் வருகை இருக்க வேண்டும். அதே நேரம், பாரபட்சமின்றி அதிபர்கள் நடந்து கொண்டால் அல்லது எமது அமைச்சுக்கள் நடந்து கொண்டால் ஆசிரியர்கள் எம்மை நாடி வரவேண்டிய அவசியமிருக்காது.

பாரபட்சம் காட்டுகின்ற அந்தக் குணநலன் இனி தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பாடசாலை தொடர்பான பிரச்சனை முன்னெடுக்கப்படுகின்றதெனின் அது அதிபரால் மட்டுமே பாடசாலைக்கு வெளியில் பொதுவாக எடுத்துச் செல்லப்படும். இன்று மூன்றாம் தரத்தில் கற்கின்ற மாணவர்கள் கூட பாடசாலை நிர்வாகத்தை விமர்சிக்கின்றார்கள்.

சில சமயங்களில் அதற்கான காரணம், அதிபரின் ஒழுக்கக் கேடான பாரபட்சமுடைய நடத்தையாக இருக்கலாம் அல்லது மறு பக்கத்தில் அதிபரை வெளியேற்றித் தான் அவர் இடத்திற்கு வர எத்தனிக்கும் இன்னொருவரின் சதியாகவும் இருக்கலாம். ஆனால், அதிபர்கள் பாரபட்சமின்றி ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது.

அதிபர் ஒருவரின் தகைமைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால் அவை பலதரப்பட்டவை என்பது தெரியவரும். தலைமைத்துவப் பண்புகள், ஆசிரியர்களைக் கண்காணித்துக் கணிக்கக் கூடிய சக்தி, மாணவர்களின் ஒழுக்கத்தை நிலை நாட்டுந் திறமை ஆகியனவும் அந்தத் தகைமைகளுள் அடங்குவன.

ஒரு நல்ல அதிபராகக் கடமையாற்றுவது என்பது மிகக் கடினமான ஒரு காரியம். நேரமெடுக்குங் கைங்கரியம் அது. பலருடைய நலன்களை அலசி ஆராய்ந்து சமன் செய்யக் கூடியதாக அதிபர் ஒருவரின் கடமைகள் அமைகின்ற’ என அவர் மேலும் கூறினார்.

Related Posts