‘யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்யும் போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்டகால பயனுடைய அனர்த்த தவிர்ப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும்’ என யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
‘மழை காலத்தின்போது பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி பலர் குடும்பங்கள் பாதிப்படைகின்றன. இந்தப் பாதிப்புக்கள் தொடர்ந்து ஏற்படாமல் தடுப்பதற்காக, வெள்ளம் தேங்கும் இடங்களை இனங்கண்டு அவற்றில் வெள்ளம் தேங்காத வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் செய்யப்படவுள்ளன’ என்றார்.
‘நந்தாவில், சுதுமலை மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலுள்ள மக்கள் வெள்ளப் பாதிப்பை நிவர்த்தி செய்து தருமாறு கோரியுள்ளனர். இதனடிப்படையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளை சுத்தப்படுத்துவது மற்றும் வடிகால்களை ஆழமாக்குவது தொடர்பான தீர்மானங்கள் இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது’ என்றார்.