Ad Widget

வெள்ளை வானுக்கு அவர்களே பொறுப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் முறைமையின் கீழ், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளே, வெள்ளை வானுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதி முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதால், இராணுவம், கடற்படை, வான்படை அதன் கீழ் இயங்கும் ஊர்காவற்படை ஆகியவற்றால் இயக்கப்படும் வெள்ளை வான் கடத்தல் மற்றும் ஏனைய இனக் குழுமங்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படுகொலைகளுக்கும் அவர்களே பொறுப்பாளர்களாக காணப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பூர் கோவிலுக்கு அருகில் நேற்று (16) நடைபெற்ற மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, “அரசாங்கமும் சரி, ஜனாதிபதியும் சரி, ஒட்டுமொத்த அரச இயந்திரமும் சரி தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன.

ஓர் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டுவிட்டு, தமிழர் தரப்பை மாத்திரம் பயங்கரவாதியென குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இலங்கை அரசாங்கம் செய்த இன அழிப்புப்போரை இன அழிப்புப் போர் என ஏற்றுக்கொள்ளாது, அரச பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளாது வெறுமனே எமது மக்களை பயங்கவாதியென முத்திரை குத்த முனைவது நியாயமான செயற்பாடல்ல.

மேலும், இந்த வாரத்தை இன அழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றோம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்தினால் கொல்லப்பட்டுள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts