Ad Widget

வெள்ளைக் கொடி விவகாரம், பாலச்சந்திரன் கொலை உயர்மட்டக் கட்டளையாலேயே நடந்தன!

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது.

கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது.” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கே உரித்தான பாணியில் உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் என்றும், அத்தகைய விசாரணைப்பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றி சிலர் அர்த்தமற்றவகையில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணி என்னவென்பது புரியாமலேயே அவர்கள் உளறுகின்றனர். உண்மை என்னவெனத் தெரிந்திருந்தும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலிப் பிரசாரங்களைப் பரப்புகின்றனர்.

முன்னாள் அரசு சிறந்த இராஜதந்திர, வெளியுறவுக்கொள்கையைப் பேணவில்லை. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை எதிர்த்து நின்ற முன்னாள் அரசுக்கு சார்பாக 12 நாடுகளே குரல்கொடுத்தன. ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கைமீது கடும் அதிருப்தியில் இருந்தன.

இதனால், சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டது. புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது. இதன் பெறுபேறாக குறுகிய காலத்துக்குள் எம்மால் சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெறமுடிந்தது. அத்துடன் அமெரிக்காவின் யோசனையை இலங்கையின் யோசனையாக மாற்றினோம்.

இலங்கையின் முன்னாள் அரசால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப் புநாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டன. எனினும், தற்போது நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளும் தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 20ஆவது யோசனை மிக முக்கியமானதாகும்.

இதைப்பற்றி எவரும் கதைக்கவில்லை. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும், தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, எதைச் செய்வதாக இருந்தாலும் அது இலங்கையின் அனுமதியுடனேயே அது இடம்பெறவேண்டும் என்பது இதன் ஊடாகத் தெளிவாக புலனாகின்றது.

இந்த விடயம் இங்குள்ள பிள்ளே அணிக்கு (உதயகம்மன்பில தரப்பு) விளங்குவதில்லை. ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டது இலங்கையின் நடவடிக்கையாகும். வேறு நாட்டவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. ஆகவே, இலங்கைக்கே உரிய பாணியில்தான் உள்ளகப் பொறிமுறை நிறுவப்படும். கலப்பு நீதிமன்றம் பற்றி பேசப்படுகிறது.

அவ்வாறு எந்தவொரு யோசனையும் இதில் இல்லை. கம்போடியா நாட்டில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கான நீதிபதிகளை ஐ.நா. செயலாளர் நாயகம்தான் அமைத்தார். இங்கு அப்படியொன்றும் நடைபெறாது. எந்த நாட்டவர்கள் வந்தாலும் அரசமைப்பின் பிரகாரமே நகர்வுகள் இடம்பெறும் என்பதை மீளவும் கூறிக்கொள்கின்றேன். பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பாரதுரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் தனிவிவாதம் நடத்தினால்கூட பரவாயில்லை.

ஐ.நா. அறிக்கையிகூட பெயர்விவரம் வெளியாகவில்லை. ஆனால், பரணமக குழுவில் அது நடந்துள்ளது. உள்ளகப் பொறிமுறையை நிறுவுவதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகத்தான் சர்வகட்சி மாநாடு நடைபெற்றுள்ளது. அடுத்தவாரமும் இந்தக் கூட்டம் நடைபெறும். உள்ளக விசாரணைக்கு நாம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தோம். இதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காணாமல்போனவர்களுக்கான தனிப்பணியகம், கருணைச்சபை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உட்பட நான்கு நிறுவனங்கள் அமைக்கப்படும்.

இதில் காணாமல்போனோர் பணியகம் எதிர்காலத்திலும் இயங்கக்கூடிய வகையில் அமையும். அதேவேளை, இலங்கையின் நீதிக்கப்பட்டமைப்பு குறித்தும் பேசப்பட்டது. 1971 ஆம் ஆண்டு 1987 ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் இலங்கையின் நீதிக்கட்டமைப்பு பலமாகத்தான் இருந்தது. எனினும், முன்னைய அரசுதான் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அதன் கம்பீரத்தையும் சுயாதீனத்தையும் இல்லாது செய்தது. பிரதம நீதியரசராக சரத் என் சில்வாவை நியமித்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மெதமுலனவில் பாத்திரம் கழுவியவருக்கு நீதியரசர் பதவி வழங்கப்பட்டது.

இதனால், நீதித்துறை மீது இருந்த நம்பிக்கை கீழ்மட்டத்துக்கு வந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதித்துறையை நேர்வழியில் பயணிக்கவிட்டிருக்கின்றோம். சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதித்துறை முழுமையாக பலமடைய காலமெடுக்கும். எனவே, உள்ளகப் பொறிமுறை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வசேனத்தின் பங்களிப்பு அவசியம்.

முன்னர் இலங்கை இராணுவத்துக்கு உலகில் பெரும் கௌரவமிருந்தது. அது பின்னர் சீர்குலைக்கப்பட்டது. ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த இராணுவக்கட்டமைப்புக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இராணுவத்தின் நன்மதிப்பை மீளக் கட்டியெழுப்பவேண்டும்.

இதற்காக விசாரணை அவசியம். ஆயிரம் பேரின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கு ஒருவரைத் தண்டிப்பது தவறு கிடையாது. இராணுவம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டது. நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் சர்வதேச விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என்பதையும் இவ்விடயத்தில் கூற விரும்புகின்றேன்.

சனல் 4 ஊடகம் போர்க்குற்ற ஆவணங்களை வெளியிட்டபோது, அதன் ஊடகவியலாளரை விமர்சித்தீர்கள். அவர் இலங்கை வந்தபோது கீழ்த்தரமான முறையில் நடத்துகொண்டீர்கள். ஆனால், பரணகம ஆணைக்குழு சனல் 4 வீடியோவை நிராகரிக்கவில்லை. அது பற்றி நீதிமன்ற விசாரணை அவசியம் எனக் கூறியுள்ளது” – என்றார்.

Related Posts