Ad Widget

வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலிகள் இரு தடவைகள் படையினரை தாக்கினராம்! இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்!!

இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், வெள்ளைக்கொடி ஏந்திவந்து இரண்டு தடவைகள் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொருளாளரான சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு மீது சர்வதேசம் சமூகம், ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆகியன முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு மக்கள் ஆணையை உறுதிப்படுத்திக்கொள்ளவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மார்ச் மாதத்துக்கு முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டார்.

இந்தத் தீர்மானத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட நினைத்தார். இருப்பினும், ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் எம்மால் தீர்க்கமுடியாமல் இருந்த இப்பிரச்சினைக்கு நல்லாட்சி அரசு புதிய உத்திகளைக் கையாண்டது. இதனால் எமது தீர்மானங்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள் ஆதரவு வழங்கின.

இலங்கை இராணுவம் மனித உரிமைகளை மீறவில்லை. மாறாக, எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பே மனித உரிமைகளை மீறியது. பிரபாகரனே யுத்தக் குற்றச்சாட்டுகளைச் செய்தார். இரண்டு தடவைகள் வெள்ளைக்கொடி உயர்த்திவந்து விடுதலைப் புலிகள் இராணுவத்தைச் சுட்டனர். இதனால், பாதுகாப்பான பகுதிகளுக்கு வருபவர்களை ஆடையில்லாமல் வருமாறு கோரும் அளவுக்கு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை பொறுப்புமிக்க அரசு என்ற ரீதியில் நாங்கள் நிறைவேற்றுவோம். இருப்பினும், இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்கும் வகையில் வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கையில் தலையீடு செய்யவே ஹைபிரிட் (கலப்பு) நீதிமன்றத்தைத் தாபிக்கவே நாங்கள் அனுமதி வழங்குவதில்லை.

மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை” – என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts