Ad Widget

வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் சீ.சீ.ரி கமராவில் பதிவாகிய வீடியோவை பெறுங்கள் ; வித்தியா கொலைச் சந்தேக நபரின் கூற்றினையடுத்து மன்று உத்தரவு

வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 – 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி காணாமல் போயிருந்த புங்குடுதீவு மாணவி வித்தியா 14ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டது.

அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது ஏதாவது தெரிவிக்க விரும்பின் தெரிவிக்கலாம் என நீதவான் லெனின்குமார் சந்தேக நபர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து சந்தேக நபர்களில் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் தான் கொழும்பில் இருந்ததாகவும் வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து குறிப்பிட்ட வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இரகசிய கமராவில் பதிவாகியுள்ள வீடியோவினை பெறுமாறும் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கட்டளை இட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் வழக்கு தவணையான 15.06.2015 அன்று விசாரணை நடாத்துவதற்கு மன்று தீர்மானித்துள்ளது என்றும் எதிர்வரும் தவணையில் சந்தேக நபர்கள் சார்பில் ஏதாவது தெரிவிக்க விரும்பினால் சட்டத்தரணியை நியமித்து தெரிவிக்கலாம் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.

Related Posts