Ad Widget

வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு! மக்கள் பதற்றம்!! படிவங்களை நிரப்ப வேண்டாம் என்கின்றார் மனோ!!!

வௌ்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஏற்கெனவே, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என, மக்கள் அங்கலாய்த்தனர். குறிப்பாக, பொலிஸ் பதிவு இனிமேல் இடம்பெறாது என்றவாறான வாக்குறுதிகள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையிலேயே, இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.

வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புகள் சிலவற்றுக்குக்கே இவை விநியோகிக்கப்பட்டன. எதன் அடிப்படையில், அந்தத் தொடர்மாடிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

“எந்த​வொரு பிரதேசத்திலும், எந்தவொரு நபரிடமும், அவர்களின் இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு ​கோரிக்கை விடுக்க, பொலிஸாருக்கு முடியும்” என, பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் ஊடகப்பிரிவின் பணிப்பாளருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆட்களைப் பதிவு செய்யுமாறு கோருவதற்கு, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வௌ்ளவத்தை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்களிடம், அவர்களின் விவரங்களைப் பதிவுசெய்யுமாறு கோரி, பொலிஸாரால் விண்ணப்பப்படிவங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கேட்ட போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது வௌ்ளவத்தை தொடர்மாடி குடியிருப்புகளில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல, ஏனைய சகல வீடுகளிடமும் பதிவு செய்யுமாறு கோரப்படும் எனவும் நாட்டின் சகல பிர​தேசங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும், இது வழமையான ஒரு நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளவத்தைப் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் படிவங்களைப் பூரணப்படுத்த வேண்டாமெனவும், பூரணப்படுத்துவதற்கான தேவை கிடையாது எனவும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்படுவதாக அவருக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அது தொடர்பான அறிவிப்பொன்றை விடுத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் விநியோகிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கோரும் படிவங்களை, அங்கு குடியிருப்பவர்களால் பூரணப்படுத்தப்பட வேண்டியதில்லை. வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமன்னவுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கும், இது தொடர்பில் நான் பணித்துள்ளேன்.

சட்டத்துக்குப் புறம்பான, நைஜீரியாவைச் சேர்ந்த சிலர், வெள்ளவத்தையில் வசித்து வருவதாகவும், அவர்களைத் தேடுவதாகவும் வெள்ளவத்தைப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அவ்வாறான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை வழங்குமாறு குடியிருப்பாளர்களைக் கோருமாறு, நான் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளேன். ஆனால், பொதுவான தகவல்களைக் கோர வேண்டாமெனத் தெரிவித்தேன்.

அவ்வாறான பூரணமான தகவல்களை வழங்குவதனூடாக, கடந்த காலங்களில் எம்மக்கள், கஷ்டங்களை எதிர்கொண்டிருந்தார். அவ்வாறான தகவல்களைக் கோருவதற்கான தேவையெதும் தற்போது கிடையாது” என, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

Related Posts