Ad Widget

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு மாகாணம்!

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மாவட்டங்களில்,பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பலரும் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு பல இடங்களில் வெள்ளம் மேவிப் பாய்கிறது.

கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் பொன்னகர் பகுதிகளில் மழை வெள்ளத்தினால் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.

சாந்தபுரம் பகுதியில் மழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றுள் 18 வீடுகள் முழுமையாகவும், 32 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர பொன்னகர் பகுதியிலும் 12 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முறிகண்டி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் 3 அடி உயரத்திற்கு வௌ்ளம் தேங்கியுள்ளதாகவும், அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை, மட்டக்களப்பு, திருகோண மலை மாவட்டங்களிலும் கடும் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Related Posts