Ad Widget

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டமைப்பினர் உதவி

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகிய வடமராட்சியிலுள்ள மூன்று கிராமங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உலர் உணவுகளை வழங்கினர்.

வடமராட்சியிலுள்ள இராஜகிராமம், பொலிகண்டி மற்றும் தும்பளை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுகள் வழங்கப்பட்டன. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் சென்ற குழுவினரே இந்த உதவிகளை மக்களுக்கு வழங்கினர்.

வடமராட்சி பகுதியில் வெள்ளப் பாதிப்பால் பொலிகண்டி, தும்பளை கிழக்கு, மூர்க்கம், இராஜகிரமாம், துன்னாலை, கற்கோவளம், புனிதநகர், வியாபாரி மூலை, பொன்நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அதனை வழிந்தோட செய்வதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக வடமாகாண சபையினர் இதன்போது மக்களுக்கு கூறினர்.

மேலும், அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிரந்தரமான மற்றும் சீரான வடிகாலமைப்பை ஏற்படுத்துவதற்கான வழிகளையும் மேற்கொள்வதாக கூட்டமைப்பினர் இதன்போது கூறினர்.

இந்த விஜயத்தில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts