Ad Widget

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு மாகாணம்!

புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமைப்போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, கடந்த வாரம் புரேவி புயலால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில், மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் பெய்து வரும் கனத்த மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பாரதிபுரம் பகுதி வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.

மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

கனகாம்பிகை குளம் வான்பாய்வதால் அதிக நீர் வெளியாகிறது. இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் இழக்கு, உரையால் புரம் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts