Ad Widget

வெளிவாரி அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்; பொது ஊழியர் சங்கம்

Job_Logoவடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியர்களின் சேவையை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதுடன், குறித்த வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவும் ஆவன செய்யப்படவேண்டும்.

இவ்வாறு, அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடமாகாண ஆளுநருக்கு சங்கம் அனுப்பிவைத்துள்ள அவசர மனு ஒன்றில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் எஸ்.லோகநாதன் இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார். இந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாணத்திலேற்பட்ட போர் சூழ்நிலையின் பின்னர், வடக்கு மக்களின் நலன்கருதி அரச அலுவலகங்கள் திணைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களுக்கு (ஆளணி) வெளிவாரி அடிப்படையில் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டது.

இதன்படி வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்கள், திணைக்களங்களுக்கு ஊழியர்கள், சாரதிகள், வெளிவாரி அடிப்படையில் சலுகையிலான வெற்றிடங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு நியமனம் பெற்ற வெளிவாரி அடிப்படையிலான ஊழியர்கள், சாரதிகள் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுநிர்வாக 06/2006 சுற்றறிக்கைக்கு அமைவாக சம்பளம் பெற்றுத் தமது கடமைகளைச் சீராகச் செய்து வருகின்றனர்.

இந்த வெளிவாரி ஊழியர்கள் வலயக்கல்வி அலுவலகம், விவசாயத் திணைக்களம், வீதி அபிவிருத்தி உள்ளூராட்சி, கூட்டுறவு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களங்களில் கடமை புரிகின்றனர்.

இவ்வாறு கடமை புரியும் ஊழியர்களில் பணியாளர் சேவை சார்ந்தவர்கள் சுமார் 65 பேர் வரையும், சாரதிகள் 35 பேர் வரையுமுள்ளதாக அறியவருகின்றது.

மேலும் கிழக்கில் மேற்படி ஊழியர்கள் போன்று வெளிவாரி அடிப்படையில் கிழக்கு மாகாண சபையால் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை நாடு முழுவதும் ஒப்பந்தம் மற்றும் சலுகையிலான அடிப்படையில் நியமனம் பெற்று 180 நாள்கள் சேவையாற்றிய ஊழியர்களுக்கும் பொதுநிர்வாக 20/2009 சுற்றறிக்கைக்கு அமைவாகவும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதேவேளை வடக்கில் வடமாகாண அலுவலகங்களில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட வெளிவாரி அடிப்படையிலான ஊழியர்களுக்கும், சாரதிகளுக்கும் சில அலுவலகங்கள் சம்பளம் வழங்க மறுத்து வருகின்றன என்றும் இந்த ஊழியர்களை சேவையிலிருந்து நிறுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஊழியர்கள் எமது தொழிற்சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

தேவைக்குப் பயன்படுத்திவிட்டு தூக்கிவீசும் வகையிலான இந்த நடவடிக்கைகள் பெரும் வேதனையையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

எனவே குறித்த வெளிவாரி அலுவலகப் பணியாளர்கள், சாரதிகளின் சேவையை முடிவுறுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு நாங்கள் கோரிக்கை விடுப்பதுடன் இந்த ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும் கோருகின்றோம்.

இவர்களை உடனடியாக நிரந்தரமாக்க முடியாதபட்சத்தில் பொது நிர்வாக அமைச்சினால் காலத்துக்கு காலம் வெளியிடப்படும் நிரந்தர நியமனம் வழங்கல் சுற்றறிக்கைக்கு அமைவாக நிரந்தர நியமனம் வழங்கலாம்.

அதுவரை இந்த ஊழியர்கள் கடமையாற்றுவதற்கு அமைய அடிப்படையிலான முறையான நியமனத்தை வழங்கி ஏனைய ஊழியர்கள் பெற்றுக்கொள்ளும் சலுகைகளைப் பெறுவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அல்லது வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் தங்களது ஆளுநர் அனுமதி பெற்று இது விடயத்தில் உதவவேண்டும்.

நிரந்தர நியமனத்துக்காக 2012 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களும், மேற்படி வெளிவாரிஅடிப்படை ஊழியர்களிலுள்ளனர் என்பதையும் தங்களது கவனத்துக்குக் கொண்டுவருவதுடன், இந்த ஊழியர்கள் விடயத்தில் நியாயம் கிடைக்கத் தாங்கள் ஆவன செய்ய வேண்டுமெனவும் கோருகின்றோம் என்றுள்ளது.

Related Posts