பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாண மாநகர் உள்பட வடக்கு மாகாணத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர். ஜெயசேகரம், உள்ளூராட்சி சபைகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தென்னிலங்கை வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதே போன்று வடபகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் சென்று வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலங்களில் தென்னிலங்கை வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் வடபகுதியில் அதிகரித்துள்ளமையினால், அந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:
பண்டிகைக் காலங்களில் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் வடமாகாணத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அதனைத் தடை செய்ய மாகாண சபையில் பிரேரணை ஒன்றினைக் நிறைவேற்றியிருந்தோம். அதற்கும் மேலாக சில சட்டவாக்க நடவடிக்கைகளையும் வகுக்கப்பட்டு அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் உள்ளூராட்சி ஆணையாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவுறுத்தலின் படி உள்ளூராட்சி சபைகள் செயற்பட வேண்டும். ஏனெனில், உள்ளூர் வர்த்தகர்கள் வரி செலுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். சகல வரி நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள்.
வெளிமாவட்டத்தில் இருந்து வர்த்தகர்கள் வருகை தந்து, வீதிகளிலும், வேறு பிரதேசங்களிலும் நிரந்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான நிலையில் வடபகுதி வர்த்தகர்களின் பொருளாதார நிலை மிக மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியினாலும், வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவினாலும் பல வர்த்தகர்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன் சிலர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
எனவே, இந்த விடயத்தில் உள்ளூராட்சி திணைக்களங்கள் தயவுகூர்ந்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
போரினால், பொருளாதாரம் முற்றாக அழிவடைந்துள்ளது. அந்தவகையில், வடமாகாண வர்த்தகர்களை ஊக்குவித்து கைகொடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. தென்னிலங்கை வர்த்தகர்கள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதே போன்று வடபகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் சென்று வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளும் உள்ளன.
எமது வர்த்தகர்களுக்கு இடையூறாக வர்த்தகத்தில் ஈடுபடும் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்ககூடாது. அதேநேரம், ஏப்ரல் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை புலம்பெயர் தமிழர்கள் வடபகுதியை நோக்கி வருகை தருவார்கள். அந்த நேரத்தில், வெளிநாட்டு பொருள்களை கொள்வனவு செய்வது வழக்கம். எதிர்வரும் காலங்களில் புலர்பெயர் தமிழர்கள் தாயகத்தில் உள்ள வர்த்தகர்களின் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன், வடமாகாணப் பொருளாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்களும் ஒத்துழைப்பு வழங்க அவர்கள் வேண்டும் – என்றார்.