Ad Widget

வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஸ்ரீலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுமே முக்கியமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பிலான அறிக்கையை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக முன்வைத்து உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என பிரிவுகள் இல்லையெனவும், அனைத்து பரிந்துரைகளுமே முக்கியமானவைகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா நேரப்படி நேற்று இரவு 7.40 மணியளவில் விவாதம் ஆரம்பமானது, மனித உரிமை ஆணையாளர் 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதன் போது, அவர் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், வடக்கு கிழக்கில் காணிகள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கா அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று மனித உரிமை பேரவை நம்புகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த அலுவலகத்தை இயங்க வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை காணுங்கள்.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த செயற்பாடுகள் தாமதமாக உள்ளன.

கடந்த கால வன்முறைகளுக்கான நீதிச் செயற்பாடுகளில் பக்கச்சார்பற்ற சட்டமுறைமை தொடர்பில் நம்பிக்கையின்மை காணப்படுவதால் தொடர்ந்தும் சர்வதேச பங்களிப்பின் தேவை உணர்த்தப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து தனது தரப்பு அறிவுரையைப் பெறுவதற்கு இடமளிக்கப்படுவதுடன், சித்திரவதைக்கு உட்படுவதற்கான ஆபத்தைக் குறைப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுக்களுடன் குறிப்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துங்கள். இது நல்லாட்சியை பலப்படுத்துவதற்கு பெரும்பங்காற்றும்.

கடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் நினைவுபடுத்துவதுடன், உதவிகளையும் வழங்கும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும்.” என அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், தமது கருத்துக்களை வெளியிட்டதோடு, ஸ்ரீலங்காவிற்கு பதிலளிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உரையாற்றின.

இதையடுத்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம், நிமல்கா பெர்னான்டோ, ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து அன்புமணி இராமதாஸ், பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

இதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ரா-அத் அல் ஹுசைன் பதில் உரை நிகழ்த்தினார். ஸ்ரீலங்கா நேரப்படி, இரவு 9.30 மணியளவில் இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.

Related Posts