Ad Widget

வெளிச்சமின்றி வரும் திருட்டு மண் டிப்பர்களை தடுப்பார்களா உரியவர்கள்?

முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார்.

புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு பலியானார். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றிவிட்டு அவர் வீடு திரும்பிய நிலையில், பின்னர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது இவ் விபத்து நேர்ந்தது.

பரந்தன் – முல்லை வீதியில் திருட்டுத்தனமாக – சட்டவிரோதமாக மண் டிப்பர்கள் வாகன வெளிச்சம் இன்றிய நிலையில் இரவு வேளையில் தாராளமாக செல்வதாக அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் இரவு வேளையில் வீதி விபத்து அச்சுறுத்தலை தாம் எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர். இதனை பொலிஸாரும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.

இதனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். திருட்டு மண் டிப்பர்களின் சட்டவிரோத செயலால் ஒரு இளைஞனை இன்று இழக்க நேர்ந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதே வீதியில் சட்டவிரோத மண் வாகனம் மோதியதில் ஒரு ஆசிரியர் பலியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts