Ad Widget

வெதுப்பகங்களில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்

வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பாண் உள்ளிட்ட வெதுப்பக தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு இல்லாவிடின் 10ஆயிரம் ரூபாய் தண்டமும் கூட்டிணைந்த அல்லது பெரிய நிறுவனங்களில் தராசு இல்லாவிடின் ஒரு இலட்சம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படும் என்றும் நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் சட்டத்தின் கீழான கட்டளைகளின் அடிப்படையில் வெதுப்பக பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் தராசு கட்டாயமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சட்டம் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நிலையங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

பல்வேறான நிறைகளில் பாண் விற்பனை செய்யப்படுவதனால் அதற்கு ஏற்றவகையில் விலைகளை நிர்ணயிக்குமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் பிரகாரம் பாண் இறாத்தல் ஒன்றின் நிறை 450 கிராம் ஆகும். என்பதுடன் அதன் விலை 54 ரூபாவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts