Ad Widget

வெடுக்குநாறிமலை மகா சிவராத்திரி விவகாரம்: யாழில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ். நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மகா சிவராத்திரி தினமான கடந்த வெள்ளிக்கிழமையன்று வவுனியா, வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அங்கு வந்த பொலிஸார், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பூஜைப் பொருட்களையும் வீசி செயற்பட்ட விதமானது கடும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஆரம்பத்தில் வீதித் தடைகளையிட்டு ஆதிசிவன் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுத்தும் பின்னர் கால்நடையாக நடந்து செல்லுமாறு அனுமதித்து, அங்கு சென்றவர்களுக்கு குடிப்பதற்கு குடிநீரைக்கூட பொலிஸார் தடை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த செயற்பாடுகளையும் கடந்து ஆதி சிவன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜையில் ஈடுபட்ட சிவபக்தர்கள் மீதே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எந்த பாராபட்சமும் பார்க்காமல் பொலிஸார் தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பினை தெரிவித்தே இன்று மாலை, யாழ்ப்பாணம் நல்லை ஆதினம் முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதில், அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்று யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts