Ad Widget

வெடிவிபத்து குறித்து ஆராய முப்படைக் குழு களத்தில்! நாடாளுமன்றில் பிரதமர்

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கென முப்படையினரடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தக் குழுவுக்கு பொலிஸ் தரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அத்துடன், விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளைச் சட்டம் 23-2 இன்கீழ் சாவால இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தினேஸ் குணவர்தன எம்.பி. வினாக்களை தொடுத்;;திருந்தார்.

இவற்றுக்குப் பதிலளித்த பிரதமர், மேலும் கூறியவை வருமாறு:​-

“சம்பவம் நடைபெற்ற தினத்தன்று இரவு நானும், ஜனாதிபதியும் அது பற்றி கலந்துரையாடினோம். தினேஸ் குணவர்தன எம்.பியும் தகவல்களை வழங்கியிருந்தார். மறுநாள் தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெற்றது. வெடிவிபத்து தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே அது பற்றி அறிவிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற முதல் வெடிப்பு சம்பவம் இதுவல்ல. 2010 ஆம் ஆண்டில் கிழக்கில் ஆயுதக்களஞ்சியசாலையொன்று வெடித்தது. அதில் வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.

ஆயுதக்களஞ்சியத்துக்கு சாதாரண களஞ்சியமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் எரிந்துள்ளது. ஏன் சாதாரண களஞ்சியசாலை பயன்படுத்தப்பட்டது என வினவியபோது,புதிய பாதுகாப்பு தலைமையகம் அமைக்கப்படவுள்ளதால் வேறு எதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

அதேவேளை, ஆயுதக் களஞ்சியத்துக்கு கொங்கிறீட் பங்கர் முறை பயன்படுத்தப்பட வேண்டும். இப்படியான ஏற்பாடுகளுடன்தான் அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு ஆயுதக்களஞ்சியசாலைகள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக வெலிசரையிலும் இவ்வாறான கொங்கிறீட் கட்டமைப்புடன் களஞ்சியசாலை இருக்கின்றது. ஆனால், மக்கள் நடமாட்டமுள்ள சூழலிலேயே அதுவும் இருக்கின்றது.

இடையிடையே வெடிப்புகள் நடக்கின்றன. நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு ஓரிரு நாட்கள் எடுக்கும். அத்துடன், சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்கப்படும். கொழும்பு- அவிசாவளை வீதியும் இன்று வழமைக்கு திருப்பும். நாலாபுறமும் சிதறிக்கிடக்கும் வெடிபொருட்களை அகற்றும் பணியில் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக பொலிஸாரும் களமிறங்கியுள்ளனர்.

இராணுவத்தினர் சி.ஐ.டியினருடன் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.அரச பகுப்பாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் இருக்கிறது. அறிக்கை கிடைத்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்” – என்றார்.

Related Posts