Ad Widget

வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து மன்னாரில் சோதனை கெடுபிடி

மன்னாரில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளதாக கவலையடைந்துள்ளனர்.

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு முன்பாக குறித்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வருகின்றது. யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட மறவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள மீட்கப்பட்டுள்ளமை மற்றும் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்களை மீட்டுள்ளமையை அடுத்து மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் ஏ -14 மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் தள்ளாடி இராணுவ முகாமுக்கு முன்பாக சோதனைச் சாவடி பொலிஸாரால் அமைக்கப்பட்டு வருகின்றது.

நேற்றிலிருந்து அமைக்கப்படும் குறித்த சோதனைச் சாவடியூடாக செல்லும் வாகனங்கள் சேதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது என சாரதிகளும், பயணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்த சோதனைக் கெடுபிடி மீண்டும் ஆரம்பித்துவிடுமோ என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Related Posts