Ad Widget

வெசாக் தினத்தில் தமிழில் பிரித் ஓதுவோம்

“வடமாகாணத்தில் கொண்டாடப்படவுள்ள வெசாக் தினத்தில், தமிழில் பிரித் ஓதவுள்ளோம்” என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வெசாக் கொண்டாட்டம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வெசாக் தினத்தில் நாகவிகாரை, துரையப்பா விளையாட்டு மைதானம், கிளிநொச்சி, பூநகரி ஆகிய இடங்களில் வெசாக் கூடுகள் அமைக்கவுள்ளோம்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வெசாக் தினத்தை கொண்டாடவுள்ளோம். வடக்கில் அமைக்கப்படும் வெசாக் கூடுகளைப் பார்வையிட தெற்கிலிருந்து பொதுமக்களை அழைத்து வரவுள்ளோம்.

வெசாக் கூடுகளின் அருகில் தானங்கள் வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிகளாக பசுமாடுகள் வழங்கல் என்பவற்றையும் மேற்கொள்ளவுள்ளோம்.

இராணுவத்தினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று வெசாக்கூடுகளை பார்வையிட முடியாத காரணத்தால் அவர்களைக் கொண்டு இங்கு வெசாக் கூடுகளை அமைக்கின்றோம்” என்றார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோமான முறையில் அபகரித்து அமைக்கப்பட்டு வரும் விகாரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது’ என்று தெரிவித்தார்.

மேற்படி சட்டவிரோத விகாரை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது. அது தொடர்பில் விசாரித்து ஆராய்ந்தப் பின்னரே பதில் கூறமுடியும்’ என்றார்.

Related Posts