Ad Widget

வீ.ரி தமிழ்மாறன் மன்றில் ஆஜர்ப்படுத்தப்படார் – வடக்கு டிஐஜி

அசாதாரண சூழ்நிலையில் சமாதானத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்போது, கடந்த 19 ஆம் திகதி புங்குடுதீவு மக்களுடைய கோரிக்கைக்கு அமைய வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் 20 ஆம் திகதி நேற்றைய தினம் 12 மணிக்கு கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரையும் அவரை தப்பிக்க வைத்தார் என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட சட்ட விரிவுரையாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது என எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார்.

எனவே குறிப்பிட்ட விரிவுரையாளர் ஆஜர்ப்படுத்தப்படுவாரா ? அவ்வாறு இல்லை எனின் ஏன் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்த விடயத்தை எழுத்து மூலம் அறிவித்தார் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவர் தவறு செய்தார் என்றால் சாட்சிகள் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே எங்களால் கைது செய்ய முடியும்.

அந்தவகையில் சட்டவிரிவுரையாளர் தொடர்பில் சாட்சிகள் எம்மிடம் இல்லை. அவ்வாறு இருந்தால் எமக்கு வழங்குமிடத்து அவரையும் நாம் கைது செய்வோம்.

அசாதாரண சூழல் இருந்தால் அதனை சமாதானமான சூழலாக மாற்ற வேண்டியது பொலிஸாரின் கடமை. அந்த சந்தர்ப்பங்களில் மேற்கூறப்பட்ட சில விடயங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சூழலைப் பொறுத்து அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். எனவே அன்றைய அசாதாரண சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மேற்கூறிய நடவடிக்கையினை மேற்கொண்டேன்.

ஆனால் சட்ட விரிவுரையாளர் மன்றில் முற்படுத்தப்பட மாட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலோ அல்லது அவர்களுக்கு உதவினர் என்ற பெயரிலோ யாராவது செயற்பட்டால் அதனை எமக்கு சாட்சியங்களுடன் தெரியப்படுத்துங்கள்.

அவர்களைக் கைது செய்வதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள தயாராகவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts