Ad Widget

வீதி ஒழுங்குமுறைகளைத் சாரதிகள் பின்பற்றினால் விபத்தை தவிர்க்கலாம்

traffic_policeவாகனச் சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளை சரியாகக் கையாள்வதன் மூலமே அநாவசியமாக இடம்பெறுகின்ற உயிரிழப்புகளையும், வீதி விபத்துக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று யாழ். மாவட்ட வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாகனச் சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. அத்துடன் வாகனங்களை உரிய முறையில் கையாள்வது இல்லை. இதனால் வீதி விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் அநாவசியமான உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர்.

அவற்றைக் கட்டுப்படுத்த வாகன சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப வாகனங்களைச் செலுத்த வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் உட்பட மோட்டார் சைக்கிளைச் செலுத்துவோரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனைவிட சைக்கிளில் பிறேக், பெல் உட்பட லைற் என்பனவும் இருக்க வேண்டும். இதனைப் பின்பற்றி வீதிகளில் சைக்கிளைச் செலுத்த வேண்டும். சிறிய வாகனங்களைச் செலுத்துவோர் விடும் தவறுகளினாலேயே பெரிய வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறு பிள்ளைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் ஏற்படுகின்ற போது தலையிலேயே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் எதிர்பாராத உயிரிழப்பையும் சந்திக்க நேரிடும்.

இத்தகைய நடைமுறைகளை எவரும் பின்பற்றுவதில்லை. கடமையில் உள்ள பொலிஸாருக்குப் பயந்து தாம் வீதி ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதாக பாவனை செய்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அவர்களுக்கே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வீதிக் கடமையில் உள்ள பொலிசார், கண்காணிப்பதற்கு ஏற்ப வாகனச் சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது பிரதேச மக்களின் அநாவசிய விபத்துக்களைத் தடுக்க வேண்டும்.

போக்குவரத்தின் போது வீதி ஒழுங்கு முறைகளைச் சரியாகத் தெரிந்த நபர் ஒருவருக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். சரியான பரீட்சார்த்தம் இல்லாத நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதால் வீதி விபத்துக்களை அதிகமாகச் சந்திக்க நேரிடுகிறது.

குறிப்பாக வாகனச் சாரதிகளின் அசமந்தப் போக்கினாலே அதிகளவான விபத்துக்கள் யாழ். மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இதனால் இளம் சமூகத்தினரும் அநாவசியமான உயிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே வாகனச் சாரதிகள் வீதிகளில் இடம்பெறுகின்ற விபத்துக்களைத் தடுப்பதற்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உரிய வேகக் கட்டுப்பாடு, வாகனங்களின் பாவனை, பாதசாரிகளை அவதானித்தல் போன்றவற்றை அவதானிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளன என்றார்.

Related Posts