Ad Widget

வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் – டக்ளஸ்

எதிர்வரும் காலங்களில் நாம் எமது கட்சியின் சின்னமாகிய வீணைச்சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும், வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டுங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

d1

கட்சி முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட தலைமைப்பணியகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காகவும், அபிவிருத்தி மற்றும் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காகவும் நாம் எமது மக்கள் மத்தியில் இடையறாது நீடித்து நின்று உழைத்து வருகின்றோம்.

எமது அரசியல் வரலாற்றில் பல்வேறு ஆட்சி மாற்றங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். பலத்த சவால்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் நாம் சந்தித்திருந்த போதிலும் எமது மக்களை கைவிட்டு எக்காலத்திலும் எங்கும் ஓடிப்போனவர்கள் அல்ல.

இதற்கு காரணம் நாம் எமது மக்கள் மீது கொண்டிருக்கும் இடையறாத நேசிப்பும், நாம் கடைப்பிடித்து வந்திருக்கும் உறுதியான அரசியல் வழிமுறையுமே ஆகும். எம் மீதான அவதூறுகளை யார்தான் திட்டமிட்டு பரப்பினாலும் அந்த அவதூறுகள் யாவும் நாம் அடுத்த கட்ட அரசியல் செயற்பாட்டை நோக்கி செல்வதற்கான ஊக்க மருந்துகளே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த ஐனாதிபதி தேர்தலின் போது நீடித்த ஆட்சியின் ஊடாகவே இங்கு மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்ற எமது உறுதி மொழியை ஏற்று கணிசமான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

குறிப்பாக, வடக்கில் எமது வேண்டுகோளை ஏற்று வாக்களித்த மக்களின் தொகை கடந்த கால தேர்தல்களை விடவும் பல்லாயிரங்களாக பெருகியிருக்கிறது. இதை எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய நீடித்த அரசியல் அங்கீகாரமாகவே பார்க்க வேண்டும்.

ஆகவே எமது வேண்டுகோளை ஏற்று வாக்களித்த மக்களுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இதேவேளை ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே இங்கு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த மக்களும் எமக்கு விரோதமானவர்களோ, அன்றி எதிரானவர்களோ அல்ல. அவர்களும் எமது மக்களே. அவர்களது ஐனநாயக உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். வளைய மறுப்பது முறியும். வளைந்து கொடுப்பது மறுபடி நிமிரும். இந்த உண்மையுள்ள தத்துவத்தின் அடிப்படையில் நாம் விட்டுக்கொடுக்க வேண்டிய விடயங்களில் விட்டுக்கொடுத்தும், உறுதியாக இருக்க வேண்டிய விடயங்களில் உறுதியை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறோம்.

ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பார்கள். அது போல் நாம் எத்தகைய சூழலின் போதும் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எந்த வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளித்திருக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் நாம் எமது கட்சியின் சின்னமாகிய வீணைச்சின்னத்திலேயே போட்டியிடுவோம்.

இதை நாம் தீர்மானமாக எடுத்திருப்பது எமது மக்களின் ஒளிமயமானதொரு எதிர்காலத்திற்கான அறிகுறியே. வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு உரமூட்டுங்கள்! அகிம்சை வழியில் செயற்பட்ட தந்தை செல்வநாயகம் அவர்கள் கூட தனக்கு பின்னர் தனது வழித்தோன்றல்களாக எவரும் வந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்று நம்பியிருந்திருக்கவில்லை.

ஆகவேதான் அவர் தனது இறுதிகாலத்தில் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றுவார் என்று சொல்லி மறைந்திருக்கிறார்.

அது அவரது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனாலும் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றுவார் என்ற அந்த வார்த்தை தந்தை செல்வநாயகம் அவர்களின் பெயரை இன்று உச்சரிப்பவர்களுக்கு உச்சந்தலையில் அன்றே விழுந்த அடி போன்றதே.

இங்கு யாரையும் நம்பி பயனில்லை. அழுதும் பிள்ளையே அவளே பெற வேண்டும். அது போல் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமையினை வென்றெடுப்பதற்கான பாரிய கடமையை எமது கட்சியின் மீதே வரலாறு சுமத்தியிருக்கின்றது.

சுமக்கும் பாரம் அதிகம்,…. ஆனாலும் இனி நடக்கும் தூரம் அதிகமில்லை. தொடர்ந்தும் மக்களிடம் செல்லுங்கள்! மக்களின் நண்பர்கள் நாமே என்பதை மக்களுக்கு தொடர்ந்தும் உணர்த்துங்கள்.

கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை மக்களுக்கு தொடர்ந்தும் தெளிவு படுத்துங்கள். சரியான கருத்துக்கள் வானத்தில் இருந்து விழுகின்றவை அல்ல. அவை நடைமுறையில் இருந்தே எழுகின்றன. ஆகவே தொடர்ந்தும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

இதுவரை நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அரசியல் உறுதியும் மக்களுடன் பேசி அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவைகளே. விரைவில் நான் ஒவ்வொரு தொகுதிகள் தோறும் தேடி வந்து எமது கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்திப்பேன். அதே வேளை பிரதேசங்கள் தோறும் வந்து எமது மக்களையும் சந்தித்து பேசுவேன். மக்களின் கருத்துக்களை மேலும் கேட்டறிந்து காலச்சூழலுக்கு ஏற்றவாறு எமது கட்சியை நாம் செப்பனிட்டு செல்ல வேண்டும். அதன் மூலமே எமது அரசியல் இலக்கை நாம் இன்னமும் சுலபமாகவும் விரைவாகவும் எட்ட முடியும்.

எமது மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினையை கடந்த கால தலைமைகள் அடுத்த சந்ததியினர் மீது சுமத்தி விட்டு சென்றது போல் நாமும் அடுத்த சந்ததியினர் மீது சுமத்தி விட்டு சென்று விட முடியாது.

இந்த தலைமுறையின் போதே அரசியலுரிமை பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். எமது காலத்திலேயே எமது இலக்கை எட்டி விட வேண்டும்.

இவ்வாறு ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்டங்களின் அமைப்பாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.

இச்சந்திப்பின் போது கட்சியின் கடந்த கால, சமகால, மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து செயலாளர் நாயகம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Related Posts