யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளரை சந்தித்தார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு தனியே வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக மட்டும் இரா.சம்பந்தன் பேசுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளாரே? என இங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,
தினேஷ் குணவர்த்தனவின் ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,
வடக்கு, கிழக்கு என்பது நாட்டினுடைய ஒரு பகுதி அதைப்பற்றி பேசினால் நாட்டின் ஒரு பகுதியைப் பற்றி நாட்டைப் பற்றி பேசுகிறேன் என்று அர்த்தம். தினேஸ் குணவர்தன வட, கிழக்கு மாகாணங்களை பற்றி பேசுகிறாரா? இல்லையே அவர் தன்னுடைய ஊரை பற்றித்தானே பேசுகிறார். எங்களை வழி நடத்த அவருக்கு எந்த உரித்தும் இல்லை, தகுதியும் இல்லை, என்றார்.
மேலும், வடக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து பதிலளித்த சம்பந்தன்,
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் பொருத்து வீடுகள் எமது மக்களுக்கு பொருத்தமாக இருக்குமென நினைக்கவில்லை.
எமது மக்கள் பரம்பரையாக கல்லால், மன்ணால் கட்டப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தனர்.
அது அவர்களது கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்தது. பொருத்து வீடுகள் நாட்டில் எங்கும் கட்டப்படவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீட்டுத் திட்டங்கள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை, ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும்? இதற்காக ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது.
சென்ற முறை அமைச்சரவை கூட்டத்தின் போது, இது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம்.
அவற்றைப் பற்றி நாம் எமது கருத்துக்களை முன்வைத்து ஒரு முடிவை விரைவில் எடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்துள்ளார். அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண விரும்புகிறார் (அரசியல் தீர்வு) என்பது என் கணிப்பு.
ரணில் அவருக்கு துணையாக பிரதமராக வந்துள்ளார். அவருக்கு அதே சிந்தனை உள்ளது என்பது என கணிப்பு.
மைத்திரிபால சிறிசேனவின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் எமது உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய கூடிய நிலையில் உள்ளன.
அனைவரும் விஸ்வாசமாக செயற்பட்டால் இந்த வருடத்துக்குள் இது நிறைவடைய வேண்டும் என்பது என் கணிப்பு.
அவ்வாறு முடிவது நல்லம் என நினைக்கிறேன், அவ்வாறாயின் பிரச்சினை நீளாமல் தீர்க்கலாம்.
ஊடகங்களும் இதனைக் குழப்பக் கூடாது. எம் மக்கள் நீண்டகாலமாக கஸ்டப்பட்டனர்
போர் முடிந்து 8 வருடங்கள் ஆகின்றன. போர் முடிந்த பின்னும் பல காணிப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.
இராணுவம் பாதுகாப்புக்கு பயன்படுத்தாத காணிகளைக் கூட வைத்திருக்கின்றனர். காணிகளை மக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் தாங்களும் பயன்படுத்தாமல் அல்லது பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய கருமங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அந்த நிலை தொடரக் கூடாது.
மைத்திரிபால சிறிசேன அல்லது தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என நான் சொல்ல மாட்டேன்.
பல விடயங்கள் செய்யப்பட்டுள்ள. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் இவை நடந்திருக்காது. அதை மக்கள் உணர வேண்டியது அவசியம்.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகமாக அரசாங்கம் செயற்படுகின்றது என, அவர்கள் தற்போது பெரும்பான்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை
ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே ஓரளவு கவனமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது.
ஜெனிவா தீ்ர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், உண்மையில் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் நடைபெற்ற சம்பவங்கள் இனியும் நடைபெற கூடாது அதற்கு தக்க நடவடிக்கை, உத்தரவாதம் எடுக்க பட வேண்டும்.
இவை ஏற்பட முக்கிய வழி, ஒரு நிரந்தர நியாயமான அரசியல் தீர்வு என்றார்.