Ad Widget

வீடுகளை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்படும்

mahalingam-indiaஇந்திய வீட்டுத் திட்டத்தில் ஒருவர் வீடு பெறவேண்டுமாயின் ஏற்கனவே அவருக்கு வீடு இருந்து அது யுத்தத்தில் அழிந்திருக்க வேண்டும். அவ்வாறு முன்னர் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம் தெரிவித்தார்.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

வடக்கிலும் கிழக்கிலும் இரண்டாம் கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதன்படி இம்மாதம் முதலாம் திகதி வரை 26 ஆயிரத்து 931 வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில், முதல் 11 ஆயிரத்து 227 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 654 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த இந்திய வீட்டுத்திட்டம் 550 சதுர அடிகள் கொண்டவையாகும்.

இதற்காக 5 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபாய் வழங்கப்பட்டன. இந்தியாவில் இந்திய அரசாங்கம் 200 சதுர அடி வீடுகளே கட்டிக்கொடுக்கின்றன.

ஆனால் இலங்கையில் 550 சதுர அடி கொண்ட வீடு கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்திய ரூபாய் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயே கொடுக்கப்படுகின்றது. அதாவது இலங்கை ரூபாயில் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆனால் இங்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதனாலே இந்திய அரசாங்கம் இரு மடங்கு அதிகமான நிதியினை இத்திட்டத்தின் ஊடாக வழங்கியுள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கம் தீர்மானித்த 550 சதுர அடியில் பெரும்பாலானவர்கள் வீடு கட்டுவதில்லை. மாறாக அதனைவிட 51 சதவீதம் அதிகமான பெரிய வீடுகளையே கட்டுகின்றனர்.

இதனால் சிலர் கடனாளிகள் ஆகின்றனர். இதனால் இந்திய வீட்டுத்திட்டம் பயனாளிகளை கடனாளிகள் ஆக்குகின்றன என்று தவறான அபிப்பிராயமுள்ளது.

ஆனால் எல்லோருமே கடனாளிகள் அல்ல சிலர் தங்களிடம் இருந்த சேமிப்பையும் வைத்து 550 சதுர அடிக்கு கூடுதலான அளவில் வீடுகள் கட்டுகின்றார்கள்.

இந்திய வீட்டுதிட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு 550 சதுர அடியில் வீடு கட்ட முடியும். அதன் பிரகாரம் கட்டினால் யாரும் கடனாளிகள் ஆகமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் யாழிலிருந்து மாற்றலாகி கஜானா நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகராகச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts