Ad Widget

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, இந்த அறிவித்தலையும் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதுடன், வெளி நபர்கள் அந்த வீடுகளுக்குச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிவித்தலில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பிரதேசத்தின் பிரதேச செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம சேவகர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களும் குறித்த பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் இருப்பராயாயின் அவரின் தொடர்பு இலக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தங்களுக்கு அவசிய தேவை ஏற்படும் நபர்கள் இந்த இலக்கங்களைத் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு செல்வது தவிர்ந்த, ஏனைய எந்தவொரு அவசர சந்தர்ப்பம் ஏற்படும் சமயத்திலும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என்றும் எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts