Ad Widget

விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு நியாயம் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் – விவசாயிகள் தெரிவிப்பு

இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் விரைவில் கிடைக்காவிடில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் நியமனங்களில் 90 விழுக்காடு சிங்களவர்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புதன்கிழமை (12.08.2015) யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மேலும் கருத்துகளைத் தெரிவிக்கையில்,

போர் எங்களுடைய விவசாயத்தைப் பெருமளவுக்குப் பாதித்திருக்கிறது. காலநிலை மாற்றங்களால் அவ்வப்போது ஏற்படும் கடும் வரட்சியாலும்,பெரும் மழையினாலும்கூட நாங்கள் பாதிக்கப்பட்டு வங்கிக்கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் என்ற செய்தி எங்களுக்குப் பேரிடியாக உள்ளது.

தமிழ் பேச முடியாத உத்தியோகத்தர்களால் எவ்வாறு எங்கள் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து எங்களுக்கு உதவமுடியும். விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விண்ணப்பம் கோரும்போது தாய்மொழியில் க.பொ.த.சாதாரண தரத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்றே கோரப்பட்டிருந்தது. விவசாயிகள் பாமரர்கள். அவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் பேசும் உத்தியோகத்தர்களே தேவை என்பதற்காகவே இவ்வாறு கோரியிருந்தார்கள்.

இப்போது, விண்ணப்பித்த எமது இளைஞர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தெற்கில் இருந்து சிங்கள உத்தியோகத்தர்களை இங்கு அனுப்ப முன்வந்துள்ளார்கள்.

மாற்றத்துக்காக வாக்களித்த எங்களுக்கு புதிய ஜனாதிபதியும் ஏமாற்றத்தையே தந்துள்ளார். உடனடியாக இந்த நியமனங்களை இரத்துச் செய்து மாவட்ட ரீதியான நியமனங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கான கடிதத்தை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகத்திடம் விவசாயிகள் கையளித்துள்ளனர். இக்கடிதத்தின் பிரதிவடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடமும் கையளிக்கப்பட்டுள்ளதோடு,மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக்கவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Farmers Protest (1)

Farmers Protest (2)

Farmers Protest (3)

Farmers Protest (4)

Farmers Protest (5)

Farmers Protest (6)

Farmers Protest (7)

Farmers Protest (8)

Farmers Protest (9)

Farmers Protest (10)

Farmers Protest (11)

Farmers Protest (12)

Farmers Protest (13)

Farmers Protest (14)

Related Posts