Ad Widget

விவசாயப் போதனாசிரியர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கில் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்களுக்குத் தமிழகத்தில் திறன் விருத்திப் பயிற்சி நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் இயங்கும் தேசிய வேளாண் நிறுவனத்தின் மூலம் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (25.11.2016) விவசாய அமைச்சின் அலுவலகத்திலும் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும் இடம் பெற்றுள்ளது.

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல்களில் தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானிகளான கலாநிதி எம். ஆர். இராமசுப்பிரமணியன், கலாநிதி எஸ் வி. முருகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களோடு விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் அஞ்சனா ஸ்ரீரங்கநாதன்;, தெ.யோகேஸ்வரன், பொ.அற்புதச்சந்திரன் பூ.உகநாதன் ஆகியோரும் விவசாயப் போதனாசிரியர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இக்கலந்துரையாடல்களின் போது விவசாயப் போதனாசிரியர்களுக்கு எத்தகைய பயிற்சிகளைத் தமிழகத்தில் வழங்குவது என்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாயப் போதனாசிரியர்கள் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவேண்டியவர்கள். அந்த வகையில் விவசாயத்தின் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவசாய உற்பத்திகளுக்கான சந்தைப்படுத்தல்கள் பற்றியும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டியவர்களாக உள்ளார்கள். இதனைக் கருத்திற்கொண்டே வடக்கில் பணியாற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் அனைவருக்கும் தமிழகத்தில் திறன்விருத்திப் பயிற்சியை வழங்குவதற்கான முயற்சிகளை வடக்கு விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளது.

பெப்ரவரி 2017இல் முதல் தொகுதி விவசாயப் போதனாசிரியர்கள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 20 விவசாய போதனாசிரியர்கள் அடங்கிய இத் தொகுதியில் இவர்களுடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஒருவரும் விவசாயிகள் இருவரும் விவசாய அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் இடம்பெற உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விளைநிலங்களைப் பார்வையிட்டதோடு விவசாயிகளைச் சந்தித்து உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

04

10

08

07

Related Posts