Ad Widget

விவசாயக் கிணறுகளை பதிவு செய்யுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை

well-kinaruயாழ் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் வடமாகாண விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்குச் செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செறிவு வேளாண்மையில் அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் அதிக அளவு விவசாய இரசாயனங்கள் பிரயோகிக்கப்படுவதாலும் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட ஆரம்பித்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஏனைய மாவட்டங்களில் உள்ளதைப்போன்று ஆறுகளோ, பெரும் குளங்களோ இல்லாத நிலையில் கிணறுகளே விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்கி வருகின்றன. யாழ் மாவட்டத்தில் இத்தகைய விவசாயக் கிணறுகள் அண்ணளவாக 25,000 வரையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளபோதும் இவை பற்றிய முழுமையான தரவுகள் இதுவரையில் தரவேற்றம் செய்யப்படவில்லை.

அதிக எண்ணிக்கையான விவசாயக் கிணறுகள் சீராகப் பராமரிக்கப்படாமையால் மேற்கட்டு மற்றும் உட்பக்கச் சுவர்கள் அழிவடைந்தும் உள்ளன. யாழ் மாவட்டத்தின் நீர் வளத்தின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் விவசாய கிணறுகளின் கட்டுமானப் பரிமாணங்கள், கிணறுகளிலுள்ள நீரின் அளவு, நீரின் தன்மை உட்படப் பல்வேறு தரவுகள் அவசியமாகும். இதன் அடிப்படையில் வடமாகாண விவசாய அமைச்சு விவசாயப் போதனாசிரியர்களினூடாக இதற்கெனத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் தகவல்களைச் சேகரித்து வருகிறது.

தகவல் சேகரிப்பை விரைவுபடுத்துவதற்காக யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகளின் உரிமையாளர்கள் அனைவரையும் தங்கள் பிரதேசங்களுக்குரிய விவசாயப் போதனாசிரியர்களை அணுகி இவ்விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்பாக அதனை மீளவும் விவசாயப் போதனாசிரியர்களிடம் கையளிக்குமாறு கோருகிறோம்.

விவசாயம் காரணமாக யாழ் மாவாட்ட நீர் வளம் எதிர்நோக்கியுள்ள சவால்களை நாம் உரிய முறைகளில் எதிர்கொள்வதன் மூலமே ஒட்டுமொத்த வடமாகாணத்தின் விவசாயத்திலும் நீர்வளப் பாதுகாப்பிலும் நிலையான அபிவிருத்தியை எட்டமுடியும் என்பதால் விவசாயக்கிணறுகளைப் பதிவு செய்யும் வடமாகாண விவசாய அமைச்சின் இந்த நடவடிக்கைக்கு அனைவரையும் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts