Ad Widget

விளையாட்டில் ஈடுபட்டால் சமூகவிரோச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கலாம்

விளையாட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. சுற்றி இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேச வசதி அளிக்கின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை விளையாட்டுக்கள் தடுக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண கல்வி, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையின் கீழ் வடமாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்காக அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015 நாயன்மார்கட்டு, பாரதி விளையாட்டுத் திடலில் புதன்கிழமை (06) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

விளையாட்டுக்கள் எங்களுக்கு பலவிதமான நன்மைகளை நல்குகின்றன. உடலைக் கெட்டியாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க உதவுகின்றன. குழுவாக ஒன்று சேர்ந்து செயற்படும் மனப்பாங்கினை விளையாட்டுக்கள் வளர்க்கின்றன. அதேநேரத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை, வெற்றி தோல்வியைச் சமமாக அணுகும் தன்மை, ஆளுமையுள்ளவராக சிந்தித்துச் செயலாற்றக்கூடிய திறமை போன்ற பல குணாம்சங்களையும் விளையாட்டுக்கள் வளர்க்கின்றன.

ஒரு விளையாட்டு வீரருக்கு குறிக்கோள் இருக்க வேண்டும். இத்தனை வேகத்தில் நான் ஓட வேண்டும், இன்னவாறு விளையாடி வெல்ல வேண்டும் என்றெல்லாம் திட்டம் வகுப்பது ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு. காரியாலயத்திலும் இதேவாறான ஒரு திட்டம் வகுத்தல் எமது நாளாந்த வேலைக்கு உறுதுணையாக அமையும்.

போட்டிகளில் கலந்துகொள்ளும் போது வெல்ல வேண்டும் என்ற ஆவலும் வெல்வேன் என்ற திடசங்கற்பமும் போட்டியாளர்களுக்கு அவசியம். இலக்கை அண்மித்த நிலையில் வெல்வேனா மாட்டேனா என்ற கேள்வி பூதாகாரமாக மனதில் எழும் போது ஒருவரின் வெற்றியை நோக்கிய ஆவலும் திடமான முயற்சியுமே அவரை வெற்றி கொள்ளச் செய்கின்றன.

எமது அலுவலகங்களிலும் இப்பேர்ப்பட்ட ஆவலும் முயற்சியும் எம்மை ஊக்குவித்து முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு இப்பேர்ப்பட்ட குணங்களை நாங்கள் விருத்தி செய்கின்றோமோ அந்த அளவுக்கு அலுவலகங்களிலும் நாங்கள் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை காணக்கூடியதாக இருக்கும். எமது மனங்களை வலுவாக வைத்திருக்கவும் நினைத்ததை அடையும் மனப்பக்குவத்தை பெறவும் இவை யாவும் உதவி புரிகின்றன என்றார்.

Related Posts