Ad Widget

விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட எனக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடம் கிடைத்திருந்தது. இதனை, ஊடகங்களும், சில அதிகாரிகளும் உறுதிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருந்தேன்.

நள்ளிரவு 2 மணிவரை காத்திருந்து சரியான நிலைவரத்தை அறிவிக்கும்படி நான் கேட்டிருந்தேன். இருந்தாலும் அவர்கள் காலதாமதம் செய்தார்கள். அதன் பின்னர் இறுதியாக எனது விருப்பு வாக்கு நிலை நான்காவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பது மிகவும் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. இருப்பினும் இதனைப்பற்றி தமிழரசுக் கட்சித் தலைவரிடம் முறையிடவுள்ளேன். அத்துடன், தேர்தல் ஆணையாளரிடமும் இதைப்பற்றி தெரிவித்து இதற்கான விளக்கங்களைக் கோரவுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தனது ஆதரவாளர்கள் சிலர் குறித்த குழப்பகரமான சூழ்நிலையில் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts