Ad Widget

விமானம் விழுந்து நொறுங்கியது; தொழில் அதிபர் குடும்பத்துடன் பலி

பிரேசிலில் வீட்டின் மீது குட்டி விமானம் விழுந்து நொறுங்கி நேரிட்ட விபத்தில் தொழில் அதிபர், குடும்பத்துடன் பலி ஆனார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஆக்னெல்லி (வயது 56). அங்குள்ள சா பாவ்லோ நகரில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார்.

ஒரு வங்கியாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னாளில் வலே என்ற மிகப்பெரிய சுரங்க நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வந்தார்.

அவர், ரியோ டி ஜெனிரோ நகரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் ஆகியோருடன் தனக்கு சொந்தமான குட்டி விமானத்தில் (காம்ப் ஏர் 9 டர்போபுரோப் மோனோ ரகம்) சா பாவ்லோ விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 3.20 மணிக்கு புறப்பட்டார்.

புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த விமானம் காம்போ டி மார்ட்டே விமான தளத்துக்கு வெளியே 3 மாடிகளை கொண்ட ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ரோஜர் ஆக்னெல்லி, அவரது மனைவி ஆன்ட்ரியா, மகன் ஜோவா, மகள் அன்னா கரோலினா, மருமகள், மருமகன் என குடும்பமே பலியாகி விட்டது. விமானத்தை ஓட்டிய விமானி உள்பட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்ததில், அந்த வீட்டின் பணிப்பெண் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பணிப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ரோஜர் ஆக்னெல்லியுடன் சாவ் பாவ்லோ தொழில் சபையில் இணைந்து பணியாற்றி வந்த மற்றொரு தொழில் அதிபரான லாரன்ஸ் பிஹ், “ரோஜர் ஆக்னெல்லி தொலை நோக்கு பார்வையை கொண்டிருந்தவர் ஆவார். அவரது மரணம், பிரேசிலில் கார்ப்பரேட் துறையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது” என குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்கு வானிலை காரணம் அல்ல என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் விபத்து நேரிட காரணம் என்ன, ஏதேனும் நாசவேலையா என்பது குறித்து பிரேசில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ரஷியாவில் துபாய் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 62 பேரும் கூண்டோடு பலியான சோகத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாக பிரேசிலில் நடந்துள்ள இந்த குட்டி விமான விபத்து, அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts