Ad Widget

விபத்தில் உயிரிழந்த 6 வயது சிறுவனுக்காக நீதிகேட்டு யாழ். நகரில் போராட்டம்!

மினிபஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 வயதுச் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு யாழ். நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றன.

boy-dead-protrest-1

இதன்போது போராட்டக்காரர்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்களை மறித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தப்பட்டது.

கடந்த 3ஆம் திகதி பலாலி வீதியில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட மினி பஸ் ஒன்று இ.போ.ச.பஸ்ஸை முந்த விடாமல் செய்வதற்காக வேகமாக ஓடியது. இதன்போது மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோவுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். இதில் 6 வயது சிறுவனான பா.சுவஸ்திகன் சிகிச்சை பலனின்றி மரணமானார். இந்த மரணத்துக்கு நீதி கேட்டே ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் நடத்தப்பட்டன.

போராட்டத்தின் முடிவில் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

ஊர்வலத்தின்போது பாதுகாப்பான போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டதுடன், அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

boy-dead-protrest-2

Related Posts