Ad Widget

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி முழங்காவிலில் விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்தை நேற்று திங்கட்கிழமை (08.06.2015) வடமாகாண கூட்டுறவு அமைச்சர்பொ.ஐங்கரநேசன் திறந்துவைத்துள்ளார்.

பழச் செய்கையாளர்கள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கம் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் உதவியுடன் சேதன முறையில் பப்பாளிச் செய்கையை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்களையும் ஏனைய மரக்கறி வகைகளையும் பிராந்திய, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளில் ஒன்றாகவே சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்புடன் இப்புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ரூபா 20 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்தொகுதியில் அலுவலகத்தை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், விவசாய சேவைகள் மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் திறந்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினய் நந்தி, சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான இயக்குநர் டொங்லின் லீ, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார்,கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.அருந்தவநாதன், பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா ஆகியோருடன் விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்து சந்தைப்படுத்துவதற்கென விநாயகபுரம் உற்பத்திகள் கூட்டுறவுச்சங்கமும் சாரகேதா ஹோல்டிங்ஸ் (பிறைவேற்) லிமிற்றெட் என்ற தனியார் முன்னணி ஏற்றுமதி நிறுவனமும் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Posts