Ad Widget

வித்தியா வழக்கைத் திசை திருப்ப முயன்றராம்! துவாரகேஸ்வரனுக்கு ரூ.20 இலட்சம் பிணையில் விடுதலை!!

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் விதத்தில் நடந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐ.தே.கவின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல வர்த்தகருமான துவாரகேஸ்வரனை 20 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதித்தது.

மாணவியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணி கே.வி.தவராசாவை குறித்த சந்தேகநபர் தொல்லைப்படுத்தினார் என்றும் அவரின் தொழிலுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அத்துடன் தவராசாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் குறித்த சந்தேகநபர் அவதூறான செய்திகளைப் பரப்பி வந்தார் எனவும் முறைப்பாட்டாளரின் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி சஞ்சே கமகே தலைமையிலான சட்டத்தரணிகள் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கொழும்பில் வைத்து மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான துவாரகேஸ்வரன் எந்தவிதமான சட்ட்ரீதியான தலையீட்டு உரிமையுமின்றி எமது கட்சிக்காரரான தவராசாவின் தொழில்ரீதியான கடமையில் தலையீடு செய்வதுடன் அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

தவிர குறித்த சந்தேகநபருக்கு எதிராக 20 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் சந்தேகநபர் ஏற்கனவே குற்றவியல் வழக்கு ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒரு வருட சிறைத் தண்டணை விதிக்கப்பட்டவர்.

எனவே சந்தேகநபருக்கு குற்றச் செயல்கள் என்பது சர்வ சாதாரணமான விடயம். எனவே சந்தேகநபரை பிணையில் விடுவதாயின் கடும் நிபந்தணைகளை விதிக்கப்பட வேணடும் எனவும்சட்டத்தரணிகள் வாதிட்டனர். இதையடுத்து நீதிவான் நிசாந்த பீரிஸ் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் குறித்த சந்தேகநபர் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Posts