செம்மணி மனிதப்புதைகுழி : வயது வந்தோரின் எலும்புகளுக்கு மேலதிக பரிசோதனை நடத்த அனுமதி

செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை எனத் தெரிவித்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு அனுமதி அளித்துள்ளார்.

செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக நேற்று வியாழக்கிழமை (19) பி.ப 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், ஞா.ரணித்தா, மரியதாஸ் யூட் டினேஷ், கலாநிதி கு.குருபரன், எஸ்.மணிவண்ணன், க.சுகாஷ், தி.டிலக்ஷனா, பெனிஸ்லஸ் துஷான் மற்றும் ஜெ.நிஷாந்தன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும் அரச தரப்பின் சார்பில் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

அதற்கமைய செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கின் கடந்த அமர்வில் அம்மனிதப்புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்த அமர்வில் ஆராயப்படும் என்றும், கடந்த அமர்வின்போது பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், எலும்புக்கூடுகள் தொடர்பான காபன் தேதியிடல் பரிசோதனை (காபன் டேட்டிங் டெஸ்டிங்) குறித்து இன்றைய (நேற்றைய) அமர்வில் ஆராயப்படும் எனக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அமர்வின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சார்பில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கைக்கு எதிரான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தார்

அதனைத் தொடர்ந்து தனது சமர்ப்பணங்களை முன்வைத்த அவர், ‘பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விடயங்களுக்கும் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி 4 ஆவதாக சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் உள்ளடக்கங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

அவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் முன்னைய அறிக்கைகளின் உள்ளடக்கங்களில் இருந்து வேறுபடுவதற்கு ஏதுவான போதிய காரணங்களும் ஆதாரங்களும் குறிப்பிடப்படவில்லை. மிகப்பிரதானமாக முதல் மூன்று அறிக்கைகளிலும் செம்மணி சித்துபாத்தியை ‘மனிதப்புதைகுழி’ என அடையாளப்படுத்தியிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, அதற்குரிய நியாயப்பாடுகளையும் முன்வைத்திருந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி பேராசிரியரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில், செம்மணி சித்துபாத்தியில் குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதற்கான நியாயமான பின்னணி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தமையை அடுத்து, நீதிமன்றினால் அப்பகுதி குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

‘அதேபோன்று நிலத்திலிருந்து 5 அடிக்கும் குறைவான ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதும், கண்டறியப்பட்ட எலும்புகளின் அமைவும் வழமைக்கு முற்றிலும் மாறான ஒரு தன்மையைக் காண்பிப்பதாகவும், மனித எலும்புக்கூடுகளுடன் ஆடைகள் கண்டறியப்படாமை கவனிக்கத்தக்கது எனவும் பேராசிரியரின் முன்னைய அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் இவ்வனைத்து விடயங்கள் உள்ளடங்கலாக ‘மனிதப்புதைகுழி’ என்ற சொற்பதம் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை. அதுமாத்திரமன்றி செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட உடல்கள் இயற்கை அனர்த்தத்தினாலோ அல்லது ஏதேனும் தொற்றுநோயினாலோ உயிரிழந்தவர்களுடைய உடல்களாகவும் இருக்கலாம் என்ற விடயம் அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றுக்கான ஆதாரங்களை சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இருப்பினும் அவ்வறிக்கையின் முறையான ஆதாரங்கள், சான்றுகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று 1995 களில் இப்பகுதி முழுவதும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் அதுபற்றிய எந்தவொரு விடயமும் இவ்வறிக்கையில் உள்வாங்கப்படவில்லை.

இவையனைத்தும் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எனவே அவ்வறிக்கையை நாம் முற்றாக ஆட்சேபிக்கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து தனது சமர்ப்பணங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் முன்வைத்த விடயங்களுடன் இணங்குவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து விடயங்களை முன்வைத்த அவர், ‘செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 1920 ஆம் ஆண்டின் பின்னரான நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும் வரலாற்றுச் சான்றுகளின் பிரகாரம் இறுதியாக 1919 ‘ஸ்பானிஷ் ப்ளு’ என அறியப்பட்ட அம்மை நோய் பரவி பெருமளவானோர் உயிரிழந்தனர். அதன் பின்னரான காலப்பகுதியில் அவ்வாறான சம்பவங்கள் பதிவானதாக சான்றுகள் இல்லை. அதேபோன்று கண்டறியப்பட்ட எலும்புகளின் சீரற்ற தன்மை என்பன குறித்து முன்னைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு விளக்கமளிப்பது போலவே 4 ஆவது சுருக்க அறிக்கை அமைந்திருக்கிறது. எனவே அவ்வறிக்கை முற்றாக நிராகரிக்கப்படவேண்டும்.

அதேவேளை இதுவரை 580 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், இதுவரை ஒரு எலும்புக்கூட்டைக் கூட அது யாருடையது என்று அடையாளங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மரபணு பரிசோதனையை மேற்கொள்வதன் ஊடாகவே அதனைச் செய்யமுடியும். இந்தப் பரிசோதனைகள் சர்வதேச கட்டமைப்புக்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படவேண்டும்.

எனினும் அவற்றை உள்நாட்டில் செய்வதாக இருந்தாலும், முழுமையான சர்வதேச மேற்பார்வை இன்றியமையாததாகும். அதுமாத்திரமன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள அகழ்வுப்பணிகளும் சர்வதேச மேற்பார்வையுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும். இச்செயன்முறையில் பாதுகாப்புத்தரப்பினர் எவ்வகையிலும் உள்வாங்கப்படக்கூடாது’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழியுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் காலப்பகுதியில் செம்மணியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மூவரின் பெற்றோர், தற்போது சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவர்களது மரபணு மாதிரிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசி வழங்கியிருப்பதாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்கள் சார்பில் அதனை மன்றில் தாக்கல் செய்தார்.

அத்தோடு சம்பந்தப்பட்ட பெற்றோரின் பாதுகாப்புசார் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இவ்விரு சத்தியக்கடதாசிகளும் மன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். அதனை மன்று ஏற்றுக்கொண்டது.

அதேவேளை எலும்புக்கூடுகள் பற்றிய கார்பன் தேதியிடல் பரிசோதனை தொடர்பான நம்பகத்தன்மையின்மை குறித்து மன்றில் பிரஸ்தாபித்த சுமந்திரன், கார்பன் தேதியிடல் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதைத் தாம் மறுதலிக்கவில்லை என்றும், இருப்பினும் அம்முடிவுகளின் நிச்சயத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய மரபணு பரிசோதனைகளும் அதற்குச் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும் மன்னார் மனிதப்புதைகுழி மற்றும் மாத்தளை மனிதப்புதைகுழி என்பவற்றைப் பொறுத்தமட்டில் கார்பன் தேதியிடல் பரிசோதனையின் பின்னரே அந்த அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், ஆகையினாலேயே கார்பன் தேதியிடல் பரிசோனைக்கு சமாந்தரமாக மரபணு பரிசோதனையையும் கோருவதாகக் குறிப்பிட்டார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான் எஸ்.லெனின்குமார், ‘பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அறிக்கைகளின் உள்ளடக்கங்களுக்கும் நான்காவது அறிக்கையின் உள்ளடக்கத்துக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

எது எவ்வாறிருப்பினும் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அகழ்வுப்பணிகள் தொடர்பான அவரது அவதானிப்பு மற்றும் கருத்தாகவே அமைந்திருக்கிறது. எனவே அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் காபன் தேதியிடல் பரிசோதனைக்கு அப்பால் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நடைமுறையில் உள்ள வேறு பரிசோதனை முறைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், காபன் தேதியிடல் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சர்வதேச நிறுவனங்கள் நான்கைப் பெயரிடுமாறும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்தோடு இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு ஒப்புதல் அளித்த நீதிவான், பரிசோதனை மேற்கொள்ளப்படும் திகதி மன்றுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பிரசன்னம் உள்வாங்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் ஆராயப்படும் என்றும் நீதிவான் எஸ்.லெனின்குமார் அறிவித்தார்.

Related Posts