Ad Widget

வித்தியா படுகொலை வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சிங்கள சட்டத்தரணிகள் ஆஜரா?

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சிங்கள சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர். குறித்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜராக வந்தனரா அல்லது வேறு காரணங்களுக்காக வந்தனரா என்பது நேற்று விசாரணைகள் நிறைவுறும் வரை தெளிவுபடுத்தப்படவில்லை.

lawers-kayts-court

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாக இவர்களிடம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சக சட்டத்தரணிகள் கேட்ட போது தெரிவித்ததாகவும், இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் நேற்றைய தினம் மன்றில் பிரசன்னமாகியிருந்த பெரும்பாலான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந் நிலையில் இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் சட்டத்தரணிகள் எவரும் பிரசன்னமாகாமை தொடர்பிலும் நேற்று மன்றில் நீதிவானின் கவனம் செலுத்தப்பட்டது. நேற்று சுமார் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணைகள் நிறைவுக்கு வரும் தறுவாயில் சந்தேக நபர்கள் சார்பில் யாரும் ஆஜராகாதமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா புதிதாக கொழும்பில் இருந்து மூவர் மன்றுக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்களிடம் வினவுமாறு நீதிவானை அவர் கேட்டுக்கொண்டார். இதன் போது அவர்களை வினவ நீதிவான் முற்பட்டபோது போது அந்த மூன்று பேரும் நீதிமன்றிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இதன் போது பிரதிவாதிகள் கூட்டிலிருந்தவாறு சந்தேக நபர் ஒருவர் நீதிவானிடம் எங்கள் சார்பில் சட்த்தரணிகள் வைக்க முடியாத நிலமை உள்ளது. அவர்கள் ஆஜராவது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து அது தொடர்பில் இறுதியாக கருத்து தெரிவித்த நீதிவான் லெனின் குமார், இது ஒரு முக்கியமான வழக்கு என்ற ரீதியில் பிரதிவாதிகளும் சட்டதரணிகளை வைத்து அவர்களது தரப்பு நியாயங்களை முன்வைக்க வேண்டும். அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவதை எவரேனும் தடுப்பார்களாயின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் பங்கேற்பதை எந்த காரணத்திற்காகவும் யாராலும் தடுக்க முடியாது. அதேவேளை, சட்டத்தரணிகள் தமது சொந்த நிலைப்பாட்டுக்கு அமைய விலகிக்கொண்டால் அதனை அச்சுறுத்தலாக கொள்ளவும் முடியாது என்றார்.

Related Posts