Ad Widget

வித்தியா படுகொலை: சந்தேக நபர்களுக்கு ஜீலை 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரையும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.இதன்போதே இவர்கள் எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார்.

இதன் போது வித்தியாவின் தாயார், வித்தியாவின் அண்ணன், உறவினர்கள், சட்ட வைத்திய அதிகாரி, ஊர்காவல்த்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு பிரிவினர், ஆகியோர் மரண விசாரணை சாட்சியமாக முன்னிலையாகியிருந்தனர்.

இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது அண்ணனான நிசாந்தன் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவல்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்ட வைத்திய அதிகாரி யு.மயூரன் கொலை நடந்த இடத்தில் இருந்த நான்கு சாட்சிப்பொருள்களை நீதி மன்றில் சமர்ப்பித்திருந்தார்.

கடந்த வழக்கின் நீதிமன்ற உத்தரவுக்கமைய சேகரிக்கப்பட்ட சந்தேக நபர்களது இரத்த மாதிரிகள் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை வித்தியாவின் மரபனுக்களுடன் ஒப்பீட்டு ஒத்துப்போகிறதா இல்லையா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு இன்றைய மன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்களது வங்கி கணக்குகள் தொடர்பாகவும் பரீசிலனை செய்யுமாறு மன்று
உத்தரவிட்டது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட வித்தியாவின் சார்பில் அரச சட்டத்தரணி குமார் ரட்ணம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் உட்பட ஏழு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts