Ad Widget

வித்தியா கொலை வழக்கு – இந்திர குமாருக்கு விடுதலை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டது.

அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திர குமார் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றையதினம் (03) விடுவிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திர குமார் நிரபராதி என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற சிறப்பு நீதாய விளக்கம், கடந்த ஆண்டு செப்ரெம்பர் 27 ஆம் திகதி தீர்ப்பளித்து விடுவித்தது.

எனினும், மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரான கோபி என்பவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.

அந்த வழக்கு கடந்த 14 மாதங்களாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் பொலிஸ் உத்தியோகத்தர் கோபி சாட்சியாக இல்லை என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான வழக்கை மீளப் பெற்று அவரை விடுவிப்பது தொடர்பான ஆலோசனையை சட்ட மா அதிபரிடம் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் அறிக்கை அனுப்பி வைத்தனர். எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முடிவு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பூபாலசிங்கம் இந்திர குமார் சார்பில் அவரது மனைவி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வறுமை காரணமாக மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஒருவரை நியமிக்க முடியாத நிலையில் இந்திர குமாரின் குடும்பம் அவதியுற்றனர். எனினும் இளம் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் இலவசமாக முன்னிலையாகி இந்திர குமாருக்கு பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

சட்டத்தரணி சி. ரிஷிகேசனுடன் சட்டத்தரணி வி. திருக்குமரனும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இந்திர குமார் சார்பான பிணை மனுவுக்கு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், எதிர் மனுதாரான சட்ட மா அதிபர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்ட மா அதிபர் திணைக்கள அரச சட்டவாளர் மன்றில் முன்னிலையானார். பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான வழக்கை மீளப்பெறுவதாக மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனால் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திர குமார் விடுவிக்கப்பட்டார்.

மாணவி வித்தியா, 2015ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி புங்குடுதீவில் கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி பூபாலசிங்கம் இந்திர குமார் முதலாவது சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டார்.

அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Posts