Ad Widget

விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளையும் நிறத்துக

வடக்கு மாகாணத்தில் விதிமுறைகளை மீறி இயங்கும் மதுபானசாலைகளை மூடுவதுடன், புதிய அனுமதிகளை வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது

‘ யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு அதிகரித்துக் காணப்படும் மதுபான நுகர்வும் போதைப் பொருள் பாவனையுமே காரணம் என்ற கருத்து மக்கள் மனங்களில் பரவலாக காணப்படுகின்றது.

மதுவரித் திணைக்களத்தின் வழிகாட்டல்களையும் நியமங்களையும் விதிகளையும் மீறியே மதுபான நிலையங்கள் உரிமங்களை பெற்றே, வட மாகாணத்தில் இயங்கி வருகின்றன.

பல மதுபான விற்பனை நிலையங்கள் பொது இடங்களிலும், சமய வணக்கத் தலங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பனவற்றுக்கு அண்மித்தனவாகவுமே காணப்படுகின்றன.

எனவே மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள் யாவும் சட்ட விதிகளுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதை முழுமையாக மீளாய்வு செய்யுமாறும் நிதி அமைச்சை வடக்கு மாகாண சபை வேண்டி நிற்கிறது.

அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் மதுச்சாலைகளின் உரிமங்களை ரத்துச் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி அமைச்சர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் வட மாகாண ஆளுநர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம், வடமாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட கலால் திணைக்கள உதவி ஆணையாளர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Posts