Ad Widget

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற 993 குடும்பங்கள் பதிவு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறுவதற்கு 993 குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மீள் குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், ‘மீள்குடியேறுவதற்காக பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள், அரை நிரந்தர வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பவற்றை செய்து கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 70 அரை நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன’ என்றார்.

‘அந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளதாகும். அத்துடன் ஒவ்வொரு வீட்டுக்கு ஒவ்வொரு மலசலகூடமும் அமைத்து கொடுக்கப்படும். அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

அடுத்த கட்ட காணி விடுவிப்பு தொடர்பில் முடிவில்லை

இதன்போது உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, ‘வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள காணிகளில் அடுத்த கட்டமாக காணிகள் விடுவிப்பது தொடர்பில் இன்னும் முடிவாகவில்லை’ என தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடல் அண்மையில் விடுவிக்கப்பட்ட 1013 ஏக்கர் காணிகளில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கான அரை நிரந்தர வீடுகள் அமைத்து கொடுப்பது தொடர்பாகவே கலந்துரையாடினோம். அடுத்த கட்டமாக புதிதாக காணி விடுவிப்பது தொடர்பில் இன்னமும் முடிவாகவில்லை. அது தொடர்பில் உயர்மட்ட குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டது என்றார்.

விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பான விபரங்களை இராணுவத்தினர் தருவதாக அந்த கூட்டத்தில் கூறி இருந்தார்கள். இன்னமும் அது தொடர்பான முழுமையான விபரங்களை இராணுவத்தினர் தரவில்லை. முழுமையான விபரங்களை தந்தாலே அதனை அமைச்சரவையில் தெரிவித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியும் என தெரிவித்தார்.

27 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டாலே வல்லை – அராலி வீதி ஊடான போக்குவரத்து

இதன்போது உரையாற்றிய யாழ்.மாவட்ட செயலாளர், ‘இராணுவத்தினர் 27 ஏக்கர் காணியை விடுவித்தால் வல்லை அராலி வீதி ஊடான போக்குவரத்தை பொதுமக்கள் இலகுவாக ‘வல்லை – அராலி வீதியில் சிறுபகுதி உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வருவதனால் அதன் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்ய முடியாது உள்ளது.

அந்த வீதியின் ஊடான போக்குவரத்தை மேற்கொள்ள இராணுவத்தினரால் மாற்றுப்பாதை ஒன்று முன் வைக்கப்பட்டது. அந்த பாதையை சில இடங்களில் தனியாரின் காணி ஊடாக செல்கின்றது. எனவே அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.

நாம் வளலாய் கன்னியாஸ்திரி மடத்துக்கு அருகினால் செல்லும் வீதியை விடுவிப்பதன் ஊடாக வல்லை அராலி வீதியை பயன்படுத்த முடியும் என கோரியிருந்தோம். அந்த வீதியை பயன்படுத்த வேண்டும் ஆயின் இராணுவத்தினர் 27 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தோம்.

அது தொடர்பில் தமது உயர்மட்டத்துடன் கதைத்து முடிவை செல்வதாக இராணுவத்தினர் கூறியுள்ளார்கள். அந்த வீதியை பயன்படுத்த இராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்’ என மாவட்டச் செயலாளர் கூறினார்.

Related Posts