Ad Widget

விடுவிக்கப்பட்ட காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கு உதவுமாறு கோரிக்கை

மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியேற ஆயத்தமாகும் மக்களைச் சந்தித்த இவர்கள், அம்மக்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

‘எங்கள் காணிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கு உதவி செய்யுங்கள். அத்துடன், எங்களது காணிகளை துப்புரவு செய்வதற்கு நிதியுதவி வழங்குங்கள். மேலும், அழிவடைந்து காணப்படும் எங்கள் வீடுகளை மீளக்கட்டுவதற்கான வீட்டுத்திட்டத்தை, விரைந்து பெற்றுத்தாருங்கள்’ என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே ஆகியோர் இணைந்து, மேற்படி காணிகளை, யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (25) கையளித்தனர்.

இந்தக் காணிகளின் விடுவிப்பின் மூலம், காங்கேசன்துறை புகையிரத நிலையம் முழுமையாக மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதுடன், தல்செவன விடுதி வரையான காணிகள் மக்கள் மீள்குடியமரக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதேவேளை, விடுவிக்கப்பட்டுள்ள குரும்பசிட்டிப் பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் பார்க்கும் போது முழுமையாக இருந்த வீடுகளில் பல வீடுகள் தற்போது, இடித்தழிக்கப்பட்டும் சில வீடுகளில் கூரைகள், ஜன்னல்கள் கழற்றப்பட்டும் இருப்பதாக அங்கு சென்ற மக்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் தகவலளித்த குரும்பசிட்டி மக்கள், ‘முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், பஸ்ஸில் எங்களை ஏற்றி கட்டுவன் – குரும்பசிட்டி வீதியூடாக கொண்டுசென்று எங்கள் வீடுகளைக் காட்டினார்கள். இதன்போது, எங்கள் வீடுகள் முழுமையாக இருந்ததையும் அவற்றில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்ததையும் அவதானித்தோம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அங்கு சென்றபோது, வீடுகள் முற்றாக இடித்து அழிக்கப்பட்டிருந்தன’ என்றனர்.

காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதிக்கும் பொதுச் சந்தையையும் சுற்றி சுமார் 30 வீடுகள், இடப்பெயர்வுக்கு முன்னர் இருந்துள்ளன. அவை அனைத்தும் தற்போது இடித்தழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறினர்.இராணுவத்தினர் வசமுள்ள புகையிரத நிலையத்தின் மறுகரையிலுள்ள வீடுகள் தற்போது இராணுவப் பயன்பாட்டில் அவர்களின் முகாம்களாக இருப்பதாக அம்மக்கள் மேலும் மக்கள் கூறினர்.

இதேவேளை, 201.3 ஏக்கர் காணிகளில் மீளக்குடியேற இதுவரையில் 400 குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், விடுவிக்கப்பட்ட பகுதியில் மீளக்குடியேறுவதற்கு விருப்பப்படும் மக்கள், தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வேலைத்திட்டம் பிரதேச செயலகம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

Related Posts