Ad Widget

விடுதலைப் போரட்டத்தைக் கேவலப்படுத்தவா முள்ளிவாய்க்கால் பதவிப்பிரமாணம்? – முல்லை மக்கள் கேள்வி

northதமிழீழ விடுதலைப்போரையும், புலிகளையும் ,மக்களின் இழப்புகளையும் கேவலப்படுத்தவதற்காகவா ‘இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும்’ சத்தியப்பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்யபோகிறீர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டி, வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபதவிப்பிரமாண நிகழ்வைப் புறக்கணித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 9 பேரும் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்தே தங்கள் உள்ளக்கிடக்கையை முல்லை மக்கள் அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை வருமாறு-

கூட்டமைப்பின் ஒன்பது மாகாண சபை உறுப்பினர்களும் பதவி ஏற்கும் அன்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள், முள்ளிவாய்க்கால் என்பது ஈழ விடுதலையின் அடையாளம். அந்த மண்ணில் நினைத்துப் பார்க்க முடியாத எதையுமே எதிர்பார்க்காத அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காக அடிபடாத பல்லாயிரம் உயிர்கள் விதையாகியிருக்கின்றன. அதேபோல அந்த மண்ணைத் தாங்கிய முல்லைத்தீவு மாவட்ட மக்களும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக வாக்களிப்பிலும் பங்கேற்கவில்லை. அந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாகத் தெரிந்ததெல்லாம் விடுதலைப்புலிகள், தமிழீழம் என்பது மட்டுமே. பிரதேச வாதத்தைத் தூண்டுவதற்கோ, சலுகைகளுக்காகவோ அவர்கள் விலைபோகப்போவதில்லை. அவர்கள் மிகத் தெளிவானவர்கள். இறுதிப்போரில் மிக மோசமாக அழிவடைந்து அனைத்தையும் இழந்த போதிலும் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் அதி கூடிய வாக்களிப்பு வீதத்தினை அந்த மக்கள் பதிவு செய்ததன் மூலம் அவர்களின் தெளிவினைப்புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பினர் அந்த மக்களை கையில் எடுத்துக்கொண்டு, அவர்களை வீதிக்கு இறக்கி போராட்டம் செய்யவோ, அரசியல் இலாபம் ஈட்டவோ முற்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து.. அவர்கள் மீது சவாரி செய்து அவர்களை மீண்டும் மீண்டும் அவலப்படுத்த வேண்டாம். முல்லைத்தீவுக்கு அமைச்சு வேண்டும் என்று கோரியவர்கள் கூட்டமைப்பின் அரசியலாளர்களே தவிர அந்த மாவட்டத்தின் அப்பாவி மக்கள் கிடையாது. மாகாண சபை அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அதில் கிடைக்கு அற்ப சொற்ப சலுகைகளுடன் கூடிய அமைச்சுப் பதவிக்காகவோ அந்த மக்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து பல்லாயிரம் உயிர்களையும் தமது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவில்லை. முல்லைத்தீவில் ஒரு அமைச்சர் பதவி ஏற்பதன் மூலம் அந்த மக்களின் மிக நீண்ட இலட்சிய வேள்வித் தீக்கு தீனி போட முடியாது. இலங்கை என்கின்ற ஜனநாயக் குடியரசின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்படமாட்டேன் என்று தெரிவித்து, புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் எனச் சொல்லி வீழ்ந்த மாவீரர்கள் மண்ணில் நின்று சிங்கள அரசின் இறைமைக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் செய்வது முற்றிலும் சுயநல அரசியல் சார்ந்ததே என்பதுடன் மாவீரர்களை இழிவுபடுத்தும் செயற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

Related Posts