Ad Widget

விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள்! தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு! – தயா மாஸ்டர்

thaya-masterஇலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் விட்ட இரண்டு தவறுகளாகும்.

அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது என தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

போருக்குப் பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வட மாகாண சபை நிர்வாகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும் என்று தெரிவித்த தயாமாஸ்டர்.அரசியல் செயற்பாடுகளைப் பாராளுமன்றத்தினூடாக முன்னெடுக்கும் அதே நேரம் மாகாண சபையின் மூலம் அபிவிருத்திகளையே மேற்கொள்ள முடியும்.

அந்த அபிவிருத்திப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டுமென்பதால், ஆளுந்தரப்புடன் இணைந்து வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவதாகக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் யதார்த்தம் என்று தெரிவித்த தயாமாஸ்டர், மாகாண நிர்வாக அலகு நல்லதொரு முறைமையாகும்.

அப்போதைய யுத்தச் சூழ்நிலையில் அதனைப் பலப்படுத்த முடியாமற்போய்விட்டது.

இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இழைத்த இரண்டு தவறுகளாகும்.

அதனால்தான் தமிழ் மக்கள் இந்தளவு இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. தமிழர் தலைவர் செல்வநாயகம் அரசுடன் நடத்திய இணக்கப்பாட்டு முயற்சிகள் வெற்றிபெறாததால், ஆயுதப் போராட்டங்கள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டன.

அதில் விடுதலைப் புலிகள்தான் ஒட்டுமொத்தமாக நின்று போராடினார்கள். இறுதியில் நாம் அந்தப் போராட்டத்தில் தோற்றுவிட்டோம்.

ஆகவே, காலச் சக்கரம் சுழன்று மீண்டுமோர் அரசியல்வாதிகளின் கரங்களுக்குள் பிரச்சினை வீழ்ந்திருக்கிறது. இன்றைய நிலையில் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமாகவே எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

Related Posts