Ad Widget

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றால் குற்றச் செயல்கள் இடம்பெறாது; கைதான இளைஞன் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.

police-vimala-sena

மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன் (வயது 24) என்ற இளைஞன் கொடிகாமம் பொலிஸாரால் கடந்த 25ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் ரி.ஐ.டி யினர் விசாரணைகள் மேற்கொண்ட போது, அந்த இளைஞன் ‘யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, குழு மோதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற பயம் ஏற்பட்டால் இந்த குற்றச் செயல்கள் இடம்பெறாது. ஆகையால் மீண்டும் விடுதலைப்புலிகள் வருவார்கள்’ என்ற துண்டுப்பிரசுரத்தை ஒட்டியதாக கூறினான்.

குறித்த இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் ரி.ஐ.டி.யினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமலசேன மேலும் கூறினார். இந்நிலையில், தங்கள் மகன், 4ஆம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இளைஞனின் பெற்றோர்கள் கூறினார்கள்.

Related Posts