விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுளார்.
முல்லைத்தீவு தேவிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடடார்.
வடக்கிலுள்ள சுகாதார தேவை ஏனைய பிரதேசங்களை விட அதிகமானதெனக் குறிப்பிட்ட அவர், அவற்றை நிவர்த்திப்பதற்கு ஆளணி பற்றாக்குறை பெரும் தடையாக உள்ளதென்றும் நிதியொதுக்கீடும் போதுமானதாக இல்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தால் அங்கவீனமடைந்த மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வடக்கில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், இவர்களின் நலன் கருதி பல புதிய சுகாதார திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.