விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக கடமையாற்றிய சகல போராளிகளும் எந்தவித ஆயுத கலாசாரமற்ற ஜனநாயக ரீதியில் ஜனநாயகப் போராளிகளாக மீண்டும் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க ஒரு குடையின் கீழ் அணி திரண்டு ஜனநாயகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள் என ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-
“எம்மால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறப்படுபவர்கள் மூலம் எஞ்சியுள்ள போராளிகளும் மாவீரர் குடும்பங்களும் பல துரோகங்களையும் இடையூறுகளையும் சந்தித்துக் கொண்டே வருகின்றோம். போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் வைத்தே இதுவரை தமது இருப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு தமது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொண்டு எங்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் எட்டப்பர் கூட்டத்தை கடந்த எட்டு வருடங்களாக பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றோம் .
எமது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை நிறுத்த வேண்டிய கடப்பாட்டில் பொறுமையிழந்து, இனத்திற்காக இரத்தம் சிந்தி, அங்கங்களை இழந்து தளராத மன உறுதியுடன் உங்கள் பிள்ளைகளாக உங்கள் முன் வந்து நிற்கின்றோம்.
அச்சமின்றி சகல போராளிகளும் ஜனநாயகப் போராளிகளாக மீண்டும் எமது சேவையை மக்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு எந்தவித ஆயுத கலாசாரமுமற்ற ஜனநாயக ரீதியில் எம் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் அணி திரள்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.