Ad Widget

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை எவரும் அனுஷ்டிக்க முடியாது- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவுரலை அனுஷ்டிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் வடக்கு கிழக்கில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், விடுதலைப் புலிகளை நினைவுகூரும் விதத்தில் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர சகலருக்கும் அனுமதி உண்டென முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியது. எனினும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அனுஷ்டிக்கப்படக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,

“நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிய விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட போராட்டமாகவே கருதப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தப்படும் விடுதலைப் புலிகளை அனுஷ்டிக்கும் எந்த நிகழ்வுகளும் இலங்கையில் இடம்பெறக்கூடாது.

எனவே முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அனுஷ்டிக்கப்படக்கூடாது. வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அல்லது யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து நினைவுகூரல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றால் அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதியைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” என அறிவித்துள்ளது.

இதேவேளை, இதுகுறித்து இராணுவத் தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில்,

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுமதியில்லை.

அதேபோல், இராணுவ வெற்றிதினம் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஆடம்பரமாக நிகழ்வுகள் பல உள்ளடக்கி அணிவகுப்புகள் நடத்தி போர் வெற்றிதினத்தைக் கொண்டாடுவோம்.

ஆனால், இப்போது நாட்டின் நிலைமையில் எம்மால் ஆடம்பரமாக நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது. ஆகவே அமைதியாக வெற்றி தினத்தைக் கொண்டாட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அதற்காக இராணுவத்தை நாம் மறந்துவிட்டோம் என்ற அர்த்தம் அல்ல. இந்த நாட்டின் அமைதிக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து பாதுகாப்புப் படையினரையும் நாம் நினைவுகூர்ந்து அவர்களுக்கான நாளாக கொண்டாடுவோம்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர நினைவு தூபி முன்னிலையில் மாலை 4 மணிக்கு போர் வெற்றி தினம் அனுஸ்டிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில், அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதுகுறித்துக் கூறுகையில்,

இலங்கையில் இராணுவ வெற்றி தினம் அல்லது போர் வெற்றிதினம் என அங்கீகரிக்கப்பட்ட தினம் உள்ளது. அது மே மாதம் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும்.

ஆனால், விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பானது நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அப்படியென்றால் அவர்களின் நிகழ்வுகளும் நாட்டில் தடைசெய்யப்பட்டதாகவே இருக்க முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எனக் கூறிக்கொண்டு விடுதலைப் புலிகளை எவரும் அனுஷ்டிக்க முடியாது.

ஆனால், யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் குறித்து அவர்களின் குடும்ப உறவினர்கள் நினைவுகூர முடியும்” என்றார்.

Related Posts