வட மாகாண ஒருங்கிணைந்த அரச சேவையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன!

வட மாகாணத்தின் அரச சேவையைப் பலப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த அரச சேவை பதவிகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி வட மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தநிகழ்வு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

வட மாகாண சபையின் கீழ் உள்ள பல்வேறு திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிகளுக்கு 37 நியமனங்களும், முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு 14 நியமனங்களும், அலுவலக பணி உதவியாளர் பதவிகளுக்கு 44 நியமனங்களுமாக மொத்தம் 95 பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சை மூலம் சித்தியடைந்தவர்களுக்கே இவ்வாறு அரச சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய அமைச்சர்கள், வட மாகாணத்தின் அரச சேவையை வலுப்படுத்துவதற்கு தகுதியுள்ள புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும், மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இவ்வாறான ஆட்சேர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

இந்தநிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts