Ad Widget

மனம் மாறாத பட்சத்தில் மாணவர் விடுதலைஇல்லை! விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் ; கட்டளை தளபதி ஹத்துருசிங்க

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என மாணவர்கள் காத்திருப்பது வெறும் கனவாகவே இருக்கும் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.இதனாலே இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே கனவு காணாமல் விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினராலும், பெற்றோராலும் வினவப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 27, 28ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட 11 மாணவர்களில் விடுதலைசெய்யப்பட்ட 7 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர்கள் பிறரின் தூண்டுதல் காரணமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டமை தெளிவாக தெரியவந்ததை அடுத்தே அந்த 7 பேரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி இதன்போது கூறினார்.

மேலும், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளில் அவர்கள் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றுவது தெரியவந்துள்ளதுடன், அவர்கள் தமது மனநிலையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லாத காரணத்தினாலேயே அவர்களை விடுதலைசெய்ய முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த மாணவர்களின் மனநிலை மாறினால் மட்டுமே விடுதலைசெய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது, வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து முன்னெடுத்துச் சென்றால் தான் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடி தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை என அவர்களை சந்திக்கப் போகும் போது எடுத்துக் கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts